Published by T. Saranya on 2020-05-14 19:59:40
நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் மீண்டும் டென்னிஸ் போட்டியில் விளையாட ஆர்வமாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 மாத காலத்துக்கும் அதிகமான நாட்கள் முழு உலகமுமே முடங்கியிருந்ததுடன் பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை.
எனினும், தற்போது சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டு வருவதால் மீண்டும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அதற்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

டென்னிஸ் உலகின் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளான விம்பிள்டன் போட்டி இரத்தானதுடன் பிரெஞ்ச் பகிரங்க போட்டியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் கூறுகையில், “கொரோனா வைரஸ் காரணமாக டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட முடியாது போனமை ஏமாற்றமளிக்கிறது.
வெகு விரைவில் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு, மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் விளையாட ஆர்வமாகவுள்ளேன். இந்த ஓய்வை நான் விரும்பாவிட்டாலும், எனது உடம்புக்கு தேவைப்பட்டிருந்தது.
தற்போது உடல் மற்றும் மனரீதியாக புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறேன். போட்டிகளில் பங்கேற்பதற்கான முழு உடற்தகுதியையும் பெற்றுள்ளேன்” என்றார்.