பல ஆண்டுகளாக கர்ப்பம் தரிக்க சிரமப்பட்ட பின்னர், 27 வயதான ஜைனாப் என்ற பெண் காபூலின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலை ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். 

மிகுந்த மகிழ்ச்சியடைந்த அவள், ஈன்றெடுத்த ஆண் குழந்தைக்கு "நம்பிக்கை" என பொருள்படும் ஓமிட் என்று பெயரிட்டாள்.

சம்பவதினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் (05:30 GMT), அவளும் அவரது குடும்பத்தினரும் அண்டை நாடான பமியன் மாகாணத்திற்கு வீடு திரும்புவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, மூன்று துப்பாக்கிதாரிகள் மாறுவேடமிட்டு குறித்த மகப்பேற்று மருத்துவமனையின் மகப்பேறு அறைக்குள் நுழைந்து மூர்க்கத்தனமான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டனர்.

சலசலப்பைக் கேட்டு கழிவறையிலிருந்து திரும்பி ஓடிய ஜைனாப், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சரிந்து வீழ்ந்தார்.

அவர் ஒரு குழந்தையைப் பெற ஏழு ஆண்டுகள் காத்திருந்துள்ளார். குறித்த தாய் கொல்லப்படுவதற்கு முன்பு மகனுடன் நான்கு மணிநேரமே தனது நேரத்தைய செலவிட்டுள்ளார்.

இந்த அவலம் குறித்து கருத்து தெரிவித்த ஜைனாப்பின் மாமியார் சஹ்ரா முஹம்மதி, நான் என் மருமகளை காபூலுக்கு அழைத்து வந்தேன், அவள் நிச்சயம் குழந்‍தையை ஈன்றெடுப்பாள் என நம்பியிருந்தேன்.

இன்று எனது மருமகளை இழந்து விட்டேன், அவரது இறந்த உடல் மற்றும் குழந்தையுடன் பாமியனுக்கு செல்லவுள்ளேன் என கண்ணீர் சிந்தியவாறு தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலினால் புதிதாக பிறந்த இரண்டு குழந்தைகள் மற்றும் 16 பெண்கள் உட்பட மொத்தமாக 24 பேர் உயிரிழந்தனர்.

எனது 20 ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கையில் இதுபோன்ற கொடூரமான, மிருகத்தனமான செயலை நான் கண்டதில்லை என காபூலில் உள்ள அடாதுர்க் குழந்தைகள் மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் ஹசன் கமல் கூறினார்.

எனினும் காட்டுமிராண்டித்தனமாக மகப்பேறு மருத்துவமனை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரவில்லை.

Photo Credit : aljazeera