கொரோனா வைரஸ் தொற்றினால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மாலைதீவில் சிக்கித் தவித்த 108 வெளிநாட்டுப் பிரஜைகள் நேற்று கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

நாட்டை வந்தைடைந்த அனைத்து பயணிகளும் விமான நிலையத்தில் வைத்து கிருமி நீக்கும் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன் பின்னர் குறித்த விமானத்தில் வருகை தந்தை 45 பேர் பாகிஸ்தான் பிரஜைகள் லாகூர் நோக்கி புறப்பட்டனர். 

மீதமுள்ள 63 பயணிகளும், இலங்கையில் சிக்கித் தவித்த வெளிநாட்டினர் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு செல்ல தகுதியுடையவர்கள் என கருதப்படும் 99 பேர் அடங்கலாக மொத்தமாக 162 பயணிகளுடன் விமானமொற்று நேற்று இரவு 11.45 மணிக்கு பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு புறப்பட்டது.

இதேவேளை மாலைதீவில் சிக்கியுள்ள 288 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -101 என்ற சிறப்பு விமானம் இன்று காலை 7.30 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மாலைதீவு நோக்கி புறப்பட்டுள்ளது.

11 விமானப் பணியாளர்களுடன் பயணித்த குறித்த விமானமானது இன்று முற்பகல் 11.30 மணியளவில் இலங்கையை வந்தடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.