(எம்.எப்.எம்.பஸீர்)

உயர் பாதுகாப்பு வலயங்களுக்காக அரசாங்கத்தினால் கையேற்கப்பட்ட தமிழர்களின் காணிகளில் 50 சத வீதமானவை, மீள உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான உறுதிப் பத்திரங்களை கையளிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தமக்கு கால அவகாசம் வேண்டும் எனவும் உயர் நீதிமன்றுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.

உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் தமிழ் மக்களுடைய பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கெதிராக 2003 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராஜா  உயர் நீதிமன்றில்  தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகள் இன்று மீள விசாரணைக்கு வந்தது. 

உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ உள்ளிட்ட நீதியரசர்கள் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் மனுதாரரான மாவை சேனாதிராஜா சார்பில்  ஜனாதிபதி சட்டத்தரணி  எம்.ஏ. சுமந்திரன் மன்றில் ஆஜரானார். 

சுமார் 3640 ஏக்கர் காணிகள் இவ்வாறு  உயர் பாதுகாப்பு வலயங்களுக்காக அரசால் சுவீகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 50 வீதமான காணிகள்  பொது மக்களிடம்  மீள கையளிக்கப்பட்டதாக அரசின் சார்பில் மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் அவ்வாறு 50 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டு பொது மக்களுக்கு கையளிக்கப்பட்டாலும், அந்த காணிகளுக்குரிய உறுதிகளோ வேறு ஆவணங்களோ  அரசு வழங்கவில்லை எனவும்  அதனால் அக்காணிகள் குறித்து உறுதியற்ற தன்மை நிலவுவதாகவும்  மனுதாரர் தரப்பின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மன்றில் சுட்டிக்காட்டினார்.

அதனால்  விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு உறுதிகளை வழங்கவும், எஞ்சிய 50 வீதமான காணிகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் உயர் நீதிமன்றில் கோரினார்.

இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட அரச சட்டவாதி ரஜீவ் குணதிலக , இக்கோரிக்கை தொடர்பில் செயற்பட அரசுக்கு  கால அவகாசம் வேண்டும் என கோரினார்.

அத்துடன்  தமது கோரிக்கைகள் தொடர்பில் விபரமாக கடிதம் ஒன்றினை சமர்ப்பிக்கவும் அவர் மனுதாரர் தரப்பிடம் கேட்டுக்கொள்வதாக நீதிமன்றுக்கு அறிவித்தார்.

 இந் நிலையில்  சிரேஷ்ட அரச சட்டவாதி ரஜீவ்  குணதிலக கோரியதற்கு அமைய  நீண்ட கால அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்தி வைத்தது.