(இரா.செல்வராஜா)

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு இருப்பதால் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கி நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்துமாறு துறைமுக அதிகாரிகள் வாகன இறக்குமதியாளர்களிடம் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அப்புறப்படுத்தப்படாத நிலையில் துறைமுகத்தில் தேங்கி கிடக்கின்றன. 

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட வரி காரணமாக வாகனங்களை அப்புறப்படுத்துவதில் வாகன இறக்குமதியாளர்கள் அசமந்த போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். வாகானங்கள் அப்புறப்படுத்தப்படாமையால் துறைமுகத்தில் கடுமையான இடநெருக்கடி நிலவுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வாகனங்களை அப்புறப்படுத்த சலுகைகாலமும் வழங்கப்பட்டிருந்தது. எனினும் அதனை பயன்படுத்தி சொற்பளவான வாகனங்களே அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

ஜப்பான் , சீனா , இந்தியா உட்பட பல நாடுகளிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்களே அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதாக அம்பாந்தோட்டை துறைமுக உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.