(செ.தேன்மொழி)

கொவிட் -19 வைரஸ் பரவல் தொடர்பான எச்சரிக்கை நிலை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில்  வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டிருந்த சட்டங்களை தளர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம், சுகாதார பிரிவின் ஆலோசனைக்கமைய எடுக்கப்பட்டதா?, தேர்தலை நடத்துவதற்கான முயற்சியின் காரணமாக எடுக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல, அரசாங்கம் தேர்தலை நடத்தும் நோக்கில் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னரே தேர்தலை நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதேவேளை அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அர்ப்பணிக்குமாறு குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், மறுபுறம் அரச நிர்வாகப்பிரிவினர் வகித்த பதவிகளுக்கு ஓய்வுப்பெற்ற இராணுவத்தினரை நியமித்து எச்சரிக்கை விடுத்து வருகின்றது என்றும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அரச ஊழியர்கள் மாத்திரமின்றி  நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  அரசஊழியர்களின் சம்பளத்தை அர்பணிக்குமாறு  தெரிவித்திருப்பது வேண்டுகோள் என்று இல்லாமல் எச்சரிக்கை போன்று தோன்றுகின்றது.

இந்நிலையில்  சம்பளத்தை குறிவைப்பதுடன், அவர்கள் வகித்த பதவிகளுக்கு ஓய்வுப் பெற்ற இராணுவத்தினரை நியமித்து வருகின்றது. இந்த செயற்பாடுகள் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கையாகவும், இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான முயற்சிகளாகவும் தோன்றுகின்றன.

மக்களுக்கான சலுகைகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய தருணம் இது. இந்நிலையில் உலகச்சந்தையில் எண்ணை விலைபாரியளவில் குறைந்துள்ளதுடன் இதற்கான சலுகைகள் இன்னும்நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட வில்லை.

அப்படியென்றால் இந்த சலுகை யாருக்கு கிடைக்கின்றது. இலங்கைக்கான எண்ணை விநிகோயத்தை இந்திய நிறுவனம் ஒன்றே முன்னெடுத்து வருகின்றது.

மக்களுக்கு சலுகை கிடைக்காவிட்டால் இந்தச் சலுகை இந்திய நிறுவனத்திற்காக அல்லது எம்நாட்டு அரசியல்வாதிகளுக்கா கிடைக்கின்றது என்பது தொடர்பில் அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும்.

எண்ணெய் விலை தொடர்பில் எமது ஆட்சிகாலத்தில் விலை சூஸ்த்திரமொன்றை தயாரித்திருந்தோம். இதன்படி செயற்பட்டாலும் மக்களுக்கு சலுகை கிடைத்திருக்கும்.

கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதற்கு அரசாங்கத்திற்கு வாய்ப்பிருந்த போதிலும்  அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

பொதுத் தேர்தலை நடத்தும் நோக்கத்தில் நாட்டை திறந்து வைத்திருந்தமையினால் வைரஸ் பரவியதுடன்  அதன் விளைவுகளை மக்களே எதிர்நோக்கி வருகின்றனர். தற்போதும் வைரஸ் பரவல் தொடர்பான எச்சரிக்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையிலும் அரசாங்கம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல் படுத்தப்பட்டிருந்த சட்டங்களை தளர்த்த எடுத்த தீர்மானத்தில் தேர்தலை நடத்துவதற்கான நோக்கம் இருக்கின்றதா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

வைரஸ் பரவல் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் நம்நாட்டு வைத்திய நிபுணர்கள் மருத்துவ சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும் அவர்களிடம் ஆலோசனையை பெற்றுக் கொண்டா அரசாங்கம் நாட்டை திரும்பவும் வழமைக்கு திரும்புமாறு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்கட்சிகள் அனைத்தும் தேர்தலை நடத்தவேண்டாம். மக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கு என்று எச்சரிக்கை விடுத்த போதிலும், அரச தரப்பினர் தேர்தலை நடத்தவேண்டும் என்ற உறுதியிலும், எதிர்கட்சியினர் தேர்தலுக்கு அஞ்சியே தேர்தலை நடத்த வேண்டாம் என்கின்றனர் எனவும் தெரிவித்தனர்.

எமக்கு தேர்தல் தொடர்பில்  அச்சம் இல்லை. மக்களின் பாதுகாப்பே எமக்கு முக்கியம், அவர்களின் உயிர்களுக்கு சவால் ஏற்படும் வாய்ப்பிருப்பதை அறிந்தும் தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்க முடியாது.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இடமாற்றம் மற்றும் நியமனம் வழங்குவது, சட்டவிரோத செயற்பாடாகும். தொடர்ந்தும் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்படுவதுடன் பாராளுமன்றத்தை மூடிவைத்துக் கொண்டு நிதி ஒதுக்கீடு என்பன செய்து வருகின்றது. அரசாங்கம் தொடர்ந்தும் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் மீறியே செயற்பட்டு வருகின்றது.