பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவும், நாடுகளுக்கிடையிலான சில பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினாலும் பயணிகள் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கட்டார் எயார்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான QR - 655 என்ற விமானம் நேற்றிரவு 8.15 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநயாக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, டோஹாவைச் சென்றடைந்துள்ளது.

இந்த விமானத்தில் இலங்கையர்கள் உட்பட, பயணத் தடைகள் காரணமாக நாட்டில் சிக்கிக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் அடங்கலாக 110 பேர் பயணித்துள்ளனர்.

இதேவேளை உலகளாவிய ரிதியில் கொரோனா வைரஸ் கட்டுபாடுகளுடன்  முடக்கப்பட்டிருந்த பல நாடுகள் பொருளாதார நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு ஸ்ரீ லங்கன்  விமான சேவை நிறுவனம் தமது பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொண்டுள்ளது.

இதற்கமைய லண்டன், டோக்கியோ (நரிட்டா), மெல்போர்ன், மற்றும் ஹொங்கொங்கிற்கு  தமது பயணிகள் மற்றும் சரக்கு விமான சேவைகளை முன்னெடுக்க  ஸ்ரீ லங்கன் விமான சேவை முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.