(எம்.மனோசித்ரா)

பத்து வருடங்களுக்கும் அதிகமான காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதிர்வரும் காலங்களில் தீர்க்கமானதொரு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகக் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் கூறினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் நேற்று செவ்வாய்கிழமை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், 

கடந்த வாரம் நாம் பிரதமரை சந்தித்த போது எம்மால் முன்வைக்கப்பட்ட யோசனைகளில் ஒன்று அரசியல் கைதிகளை விடுவிப்பதாகும். தற்போதுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் சுமார் 10 வருடங்களுக்கும் அதிக காலம் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். மேலும் பலர் 30 வருடங்களுக்கும் அதிக காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே இது தொடர்பில் ஆராய்ந்து அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமரிடம் கோரியுள்ளோம். அதற்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்குமாறு பிரதமர் எம்மிடம் கோரினார்.

அந்த விபரங்களை இன்றைய தினம் (12 ஆம் திகதி செவ்வாய்கிழமை) தன்னிடம் சமர்ப்பிக்குமாறு பிரதமர் நேரம் ஒதுக்கித் தந்திருந்தார். அதனை நான் வழங்கியிருக்கின்றேன். ஜனாதிபதியிடம் இது குறித்து தான் கூறுவதாகவும் பிரதமர் என்னிடம் தெரிவித்தார்.

எம்மையும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுமாறு கூறினார். எனவே எதிர்காலத்தில் இது தொடர்பில் ஏதேனுமொரு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

அத்தோடு புதிய பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ஆரம்பத்திலேயே கூறியிருந்தார். எமது நிலைப்பாடும் அதுவேயாகும். அதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இறுதியான தீர்வினைக் காண வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.