(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீ கஜன்)

ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பில் இடம்பெறுகின்ற உப குழுக்கூட்டங்களில் தமிழ்த் தரப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு விளக்கமளித்து வருகின்றனர். 

குறிப்பாக வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோர் இந்த உப குழுக் கூட்டங்களில் கலந்து கொண்டு இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் விளக்கமளித்து வருகின்றனர். 

இன்றைய தினம் ஜெனிவா மனித உரிமை வளாகத்தில் நடைபெற்ற உப குழுக்கூட்டமொன்றில் கலந்து கொண்டிருந்த வடமாகாண சபை  உறுப்பினர் அனந்தி சசிதரன், முன்னாள் போராளிகளை கொண்டு இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக விளக்கமளித்திருந்தார்.

இதேவேளை நாளைய தினம் மனித உரிமை பேரவை வளாகத்தில் 3 மணியளவில் நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான உப குழுக்கூட்டத்தில் அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர். 

இந்த உப குழுக்கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெ ளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளமை உரையாற்றவுள்ளார். 

இலங்கை அரசாங்கம்  சர்வதேச அரசசார்ப்பற்ற நிறுவனங்கள்,  மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள்  போன்ற தரப்பினர்  உப நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். இந்த  உபகுழுக் கூட்டங்களில்  அரசியல்வாதிகள்  சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்,  இராஜதந்திரிகள்   மனித உரிமை காப்பாளர்கள்  பாதிக்கப்பட்ட மக்கள் என  பல்வேறு தரப்பினரும்   கலந்துகொண்டு  தமது  யோசனைகளை முன்வைத்து வருகின்றனர்.