இந்தியாவில் விழுப்புரம் அருகே பெற்றோல் ஊற்றி மாணவி தீ வைத்து எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக இருவரைக் கைது செய்து பொலிஸார் நடத்திய விசாரணையில், மரியாதைக் குறைவாகப் பேசியதால் சிறுமியை எரித்தோம் என்று கொலையாளிகள் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் அருகே உள்ள சிறு மதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் 10  ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரின் பெற்றோர் நேற்று முன்தினம் பக்கத்து ஊருக்கு சென்றிருந்த நிலையில் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் இவர்களின் வீட்டில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறியதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்றபோது, உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் மாணவி வலியால் அலறியுள்ளார்.

உடனே, அவரை மீட்டு வைத்தியசாலையில் ஊரார் அனுமதித்தனர். வைத்தியசாலையில் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தகவலறிந்து வைத்தியசாலைக்கு வந்த விழுப்புரம் நீதிபதியிடம் மாணவி வாக்குமூலம் அளித்தார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் முருகன் (51), கந்தசாமி மகன் யாசகம் என்கிற கலியபெருமாள் (60) ஆகியோர் வீட்டுக்குள் புகுந்து தன் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவி நேற்று காலை உயிரிழந்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் கணவர் முருகன், அதிமுக கிளைச் செயலாளர் யாசகம் என்கிற கலியபெருமாள் ஆகிய இருவரையும் பொலிஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக ஜெயபாலை தாக்க வந்தவர்கள் ஜெயபால் வீட்டில் இல்லாததால் அவரது மகளைத் தாக்கி, பெற்றோல் ஊற்றி எரித்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். மாணவி உயிரிழந்ததால் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், "கடந்த 8 ஆண்டுகளாக அக்குடும்பத்தினருடன் தகராறு இருந்துவந்தது. சமீபகாலமாக ஜெயபால் குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக முன்னேறி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அச்சிறுமி எங்களை மரியாதைக் குறைவாகப் பேசினார்.

இது தொடர்பான தகராறில் ஜெயபால் நேற்று முன்தினம் பொலிஸில் எங்கள் மீது புகார் கொடுக்கச் சென்றார். ஜெயபாலை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் மகள் மீது பெற்றுால் ஊற்றித் தீ வைத்தோம்" என்று தெரிவித்துள்ளனர்.