சுற்றுலாத்துறையின் ஊடாக வருமானத்தினை இழந்துள்ள அனைத்து தரப்பினருக்கும் நிவாரணங்களை வழங்குவதற்கான கோரிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதாக இலங்கை சுற்றுலாத்துறையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக சுற்றுலாத்துறையின் ஊடாக வருமானத்தினை பெறும் அனைத்து தரப்பினரும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளதாக குறிப்பிட்டு இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.எம்.ஜனுபர்ரூபவ் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட துறைசார் திணைக்கள தலைவர்களுக்கு கடிதமொன்றை எழுதியிருந்தார்.

அக்கடித்தில் நாட்டின் சுற்றுலாத்துறையினர் கடந்த மூன்று தசாப்த போரின் காரணமாகவும், அதன் பின்னர் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அண்மையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் உள்ளிட்டவற்றின் காரணத்தினால் மிகுந்த நெருக்கடிகளைச் சந்தித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது அதிலிருந்து மீண்டெழுந்துகொண்டிருக்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் மிகுந்த நெருக்கடிகளைச் சந்தித்துள்ளனர். 

குறிப்பாக. சுற்றுலாத்துறையின் சுய தொழிலாளர்கள் சொல்லெண்ணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள்.

குறிப்பாக சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுச்சூழல் வழிகாட்டிகள், கைவினைப் பொருட்கள் உற்பதியாளர்கள், விற்பனையாளர்கள், சாரதிகள், விடுதி உதவியாளர்கள், படகு இயக்குபவர்கள், பாதுகாப்பாளர்கள் எனப்பலர் தொழில்களை இழந்து வருமானமின்றி நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

அண்ணளவாக, ஒருஇலட்சத்து ஐம்பதாயிரம் பேர் இவ்வாறு அசாதரண நிலைமையால் பாதிப்படைந்துள்ளனர். ஆகவே இவர்களுக்கு ஆகக்குறைந்தது ஆறுமாதங்களுக்காகவது தலா 25ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரண நிதி வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் இக்கேரிக்கை தொடர்பில் கவனத்தில் கொண்டுள்ள அரசாங்கம் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளதோடு  நிவாரண வியடம் சம்பந்தமாக விரைவில் தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.