(இராஜதுரை ஹஷான் )

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் அமெரிக்க குடியுரிமை முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகவே குடியுரிமை விவகாரத்தை எதிர்தரப்பினர் இனி அரசியல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் .

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சார்பாகவே செயற்படுகின்றார். புதிய பாராளுமன்றத்தில் இவருக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை விவகாரத்தை ஐக்கிய தேசிய கட்சியினர் அரசியல் தேவைக்காக முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்கள். அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்தவர்களது பெயர் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இதில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஆகவே இரத்து செய்யப்பட்டுள்ள அமெரிக்க குடியுரிமை விவகாரத்தை அரசியல் பிரச்சாரமாக்குவதை எதிர்தரப்பினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வடக்கில் தனித்தேர்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ண ஜீவன் ஹூல் முயற்சிக்கின்றார். யாழ்ப்பாணத்தில் சுதந்திர கட்சியின் காரியாலயத்தின் பெயர் பலகை நீக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் அரசியல் கட்சிகளின் பெயர் பலகைகள் நீக்கப்படவில்லை.

வடக்கில் உள்ள தமிழ் ஊடகங்களுக்கு இவர்  குறிப்பிடும் கருத்துக்கள் தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மையினை கேள்விக்குள்ளாக்குகின்றது. அரசியல் கட்சிகளுடன் இணைந்து இவர் தொடர்ந்து அரச தாபனங்கள், தேர்தலை நடத்துவதற்கும் எதிரான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

இவர் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சாதகமாகவே செயற்படுகின்றார். ஆகவே புதிய பாராளுமன்றத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் இவரது உறுப்புரிமைக்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.