புத்தளம் மதுரங்குளி - கந்ததொடுவாய் ரோமன் கத்தோலிக்க மேக்காலையில் கடந்த 5 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்ட சடலமொன்று நீதிமன்றத்தின் உத்தரவில் இன்று செவ்வாய்க்கிழமை (12.05.2020) தோண்டியெடுக்கப்பட்டது.

முந்தல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பள்ளிவாசல்பாடு கிராமத்தில் வசித்து வந்த மோசஸ் அப்புஹாமி ( வயது 64) எனும் நான்கு பிள்ளைகளின் தந்தையின் சடலமே இவ்வாறு தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

புத்தளம் - சிலாபம் பிரதான வீதியின் மதுரங்குளி கரிக்கட்டைப் பகுதில் கடந்த மார்ச் மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவத்தில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.நீர்கொழும்பு பகுதியிலிருந்து கற்பிட்டி தலவில தேவாலயத்திற்கு சென்ற வாகனமும், குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான குறித்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இவ்வாறு புத்தளம் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 28 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர், மே மாதம் 4 ஆம் திகதி கொழும்பு வைத்தியசாலையில் இருந்து மீண்டும் புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்த நபருடைய சடலம் எவ்வித பிரேத பரிதோதனையும் மேற்கொள்ளாமல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ௯றுகின்றனர்.

உறவினர்களிடம்  ஒப்படைக்கப்பட்ட  சடலம் 5 ஆம் திகதி மதுரங்குளி - கந்ததொடுவாய் ரோமன் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே, இன்று (12.05.2020) காலை 9.00 மணிக்கு புத்தளம் மாவட்ட நீதிவான் லஹிரு என் சில்வா முன்னிலையில் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

புத்தளம் தள வைத்தியசாலையின் பதில் சட்ட வைத்திய அதிகாரி கே.கே.குலரத்னநாத் பிரமதாச மற்றும் முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.