(நெவில் அன்தனி)

விளையாட்டுத்துறை அமைச்சின் விதிமுறைகள், நிபந்தனைகளின் கீழ் கிரிக்கெட், றக்பி, கால்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்களுக்கான தேசிய குழாம்களின் பயிற்சிகளை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம்  திகதி ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு 8 விதிகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய சுற்றறிக்கையை கிரிக்கெட், றக்பி, கால்பந்தாட்டம் ஆகிய சங்கங்களின் தலைமைகளுக்கு மின்னஞ்சல்மூலம் விளையாட்டுத்துறை அமைச்சு அனுப்பிவைத்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சு செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்த்ரவின் ஆலோசனைக்கு அமைய இந்த சுற்றறிக்கையை விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய அனுப்பிவைத்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இம் மாதம் 15ஆம் திகதி பயிற்சிகளை ஆரம்பிக்கும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சின் அனுமதியைக் கோரியிருந்தது.

ஆனால் புதிய அறிவுரைக்கு அமைய தேசிய கிரிக்கெட் குழாத்தின் பயிற்சிகளை ஜூன் மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, கிரிக்கெட், றக்பி, கால்பந்தாட்டம் ஆகியவற்றின் தேசிய குழாம்களில் இடம்பெறும் வீர, வீராங்கனைகளின் பெயர் விபரங்களை விளையாட்டுத்துறை அமைச்சுக்கும் விளையாட்டுத்தறை வைத்திய நிறுவனத்துக்கும் இம் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு குறிப்பிட்ட சங்கங்களை அமைச்சு கோரியுள்ளது.

அதனைத் தொடர்ந்து அமைச்சும் வைத்திய நிறுவனமும் வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றி பயிற்சிகளை ஜூன் மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கலாம் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டம் கட்டமாக பயிற்சிகளை ஆரம்பிப்பதே சிறந்தது எனத் தெரிவித்துள்ள அமைச்சு, பயிற்சிகளில் ஈடுபடுவோர் பயிற்சி நிலையங்கள் அல்லது மைதானங்களுக்கு மாத்திரமே தங்குமுகாம்களிலிருந்து செல்ல அனுமதிக்கப்படுவர் என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது.

அவசியத் தேவைகளின் நிமித்தம் வீர, வீராங்கனைகள் வேறு இடங்களுக்கு செல்வதாயின் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் அல்லது விளையாட்டுத்துறை வைத்திய அதிகாரியிடம் அனுமதி பெற்ற பின்னரே வெளியில் செல்ல முடியும் என பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய தெரிவித்துள்ளார்.