(எம்.ஆர்.எம்.வஸீம்)

தபால்  மூலம் வாக்களிப்பதற்கு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து தெரிவத்தாட்சி அலுவலர்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2020 பாராளுமன்ற தேர்தலுக்காக அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித்திகதியாக நியமிக்கப்பட்டிருந்த கடந்த மார்ச் 17 ஆம் திகதிவரை அந்தந்த மாவட்டங்களின் அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தையும் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி அறிவித்திருந்தோம்.

எனினும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதிவரை கிடைக்கப்பெற்ற அஞ்சல் மூலம் வாக்களிப்பு விண்ணப்பங்களை நாளை மறுதினம் 14 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு முன்னர் கையளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் இந்த அஞ்சல் மூல வாக்கு விண்ணப்பங்களை உரிய அலுவலகம் அல்லது அரச நிறுவனம் அமைந்துள்ள மாவட்டத்திற்குரிய மாவட்டச் செயலகங்கள்,  மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் ஆகியவற்றிலோ அல்லது இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் தலைமைச் செயலகத்திலோ தழுவல் (மறைக்கப்பட்ட) கடிதத்துடன் நேரடியாக கையளிப்பதற்கு அந்தந்த அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த அறிவித்தலானது அஞ்சல் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்காெள்ளும் புதிய அறிவித்தலாென்றாகவாே அல்லது விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கென நியமிக்கப்பட்டுள்ள புதிய திகதியொன்றாகவோ கருதக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.