(எம்.ஆர்.எம்.வஸீம்)

 

புகையிரதம் மூலம் கொழும்புக்கு வருவதற்கு இரண்டாயிரத்து 800 பேர் முன் அனுமதி பெற்றிருந்தபோதும் 997 பேரே வருகை தந்திருந்தனர். அதனால் ஒதுக்கப்பட்ட 47 புகையிரதங்களில் 10 புகையிரத வண்டிகளே சேவையில் ஈடுபட்டன என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஊரடங்கு சட்டம் இன்று தளர்த்தப்பட்ட பின்னர் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் வரையறைகளுடன் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்திருந்தது. 

அதன் பிரகாரம் பொது போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சும் சுகாதார துறையின் ஆலாேசனையின் பிரகாரம் சேவையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தது.

அதன் பிரகாரம் புகையிரதம் மூலம் கொழும்புக்கு வருவதற்கு இரண்டாயிரத்து 800பேர் முன் அனுமதி பெற்றிருந்தனர். என்றாலும் அவர்களில் 997 பேரே புகையிர நிலையத்துக்கு வந்திருந்தனர்.

அத்துடன் முன்கூட்டி அனுமதி பெற்றிருந்த அனைவருக்கும் போதுமான போக்குவரத்து வசதியை மேற்கொண்டிருந்ததுடன்  47 புகையிரத வண்டிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

இருந்தபோதும் அனுமதி பெற்றவர்களின் வருகை குறைவாக இருந்ததால் 10 புகையிரத வண்டிகளே சேவையில் ஈடுபட்டன. அதேபோன்று போக்குவரத்துக்காக நாடுபூராகவும் 5 ஆயிரத்தி 200 பஸ் வண்டிகள் தயார் படுத்தியிருந்தபோதும் 3 ஆயிரத்தி 200 பஸ் வண்டிகளே போக்குவரத்தில் ஈடுபட்டிருந்தன.

குறிப்பாக ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபடியால் பஸ் வண்டிகளில் சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் தங்கள் சேவை நிலையங்களுக்கு வருகை தருவதற்கு ஏற்பட்ட அசெளகரியமே இதற்கு காரணமாகும். அத்துடன் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று கொழும்பு புறக்கோட்டை புகையிர நிலையத்துக்கு சென்று நிலைமையை கண்காணித்திருந்தார்.

நாளையதினம் தனியார் பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு பஸ் சங்கங்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக இதன்போது அமைச்சர் தெரிவித்திருந்தார்.