அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸிக்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று முதல் வெள்ளைமாளிகை பணியில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உதவியாளர் ஒருவருக்கும், துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் செய்தித் தொடர்பாளர் கேட்டி மில்லருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக 73 வயதான அமெரிக்க ஜனாதிபதியும், 60 வயதுடைய துணை ஜனாதிபதியும் நாள்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Photo AP

இதில் நோய் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டப்பட்ட பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், துணை ஜனாதிபதி மைக் பென்சும் தன்னை தனிமைப்படுத்தி கொள்ளாமல் அலுவலகப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஓ மெலி தெரிவித்துள்ளார்.

ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிபரங்களின்படி அமெரிக்காவில் 24 மணித்தியாலங்களில் 20,241 புதிய கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 733 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 1,329,791 நோய்த்தொற்றுகளும், குறைந்தது 79,528 உயிரழப்புகளும் பதிவாகியுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 20.5 மில்லியன் வேலைகள் இழக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.