(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பகுதியில் திருமண வீடொன்றில் இருந்து 7 இலட்சம் ரூபா பணம் மற்றும் 35 பவுண் நகை ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் உள்ள வீட்டில் கடந்த சனிக்கிழமை திருமணம் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த வீடு மணப்பெண்ணுடைய வீடாகும்.

இந்நிலையில் அன்று இரவு வீட்டில் இருந்தவர்கள் சம்பிரதாயங்களின்படி மாப்பிள்ளை வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டில் ஒரு சிலரே தங்கியிருந்தனர். இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவ் வீட்டினுள் நூழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது வீட்டில் இருந்த 35 பவுண் நகை, 7இலட்சம் ரூபா பணம் மற்றும் திருமண வீட்டிற்கு வந்தவர்கள் மணமக்களுக்கு வழங்கிய அன்பளிப்பு பணம் என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக வீட்டில் இருந்தவர்கள் காலையே அறிந்துள்ளதுடன் வீட்டின் பின்புறமான கதவு வழியாகவே கொள்ளையர்கள் உள் நூழைந்துள்ளமையை கண்டறிந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.