உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர் விராட் கோலிதான் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான இயன் செப்பல் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்துள்ளதாவது,

“இந்தியா அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இத்தொடர் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும்.

கடந்த முறை இந்திய அணி தொடரை வென்றதால் இம்முறை மிகுந்த நம்பிக்கையுடன் இங்கு வருவார்கள். ஆனால் ஸ்டீவன் ஸ்மித்தும், டேவிட்  வோர்னரும் அவுஸ்திரேலிய அணியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதால், இந்த முறை இந்தியாவுக்கு சற்று கடினமாக இருக்கும். இவர்கள் இருவரையும்  விரைவில் ஆட்டமிழக்கச் செய்தால், இந்தியா வெற்றி பெறலாம். இல்லாவிட்டால் அவுஸ்திரேலியா வெற்றி பெறும்.

மூன்று வடிவிலான போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணித்தலைவரான விராட் கோலி, ஓட்டங்களை குவித்து வரும் விதம் வியப்பூட்டுகிறது. தற்போது உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர் விராட கோலிதான் ”  என்றார்.