கட்டுப்பாடுகளுடன் அன்றாட நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம் : முழுமையான விபரம் இதோ !

By J.G.Stephan

10 May, 2020 | 05:03 PM
image

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுமார்  ஒரு மாதத்திற்கும் அதிக காலத்தின் பின்னர் நாளைய தினத்திலிருந்து அன்றாட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில் வேலைத்தளங்களில் கொவிட்-19  பரவுவதைத்  தடுப்பதற்கான  முன்னாயத்தங்கள்  மற்றும் அதற்காக எடுக்கப்பட வேண்டிய பதில் நடவடிக்கைகளை பற்றி சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

இவ்வழிகாட்டி அறிவுறுத்தல்கள் ஏப்ரல் 17 ஆம் திகதி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட 'வேலைத்தளங்களில் கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான முன்னாயத்தங்கள் மற்றும் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான செயற்பாட்டு வழிகாட்டி அறிவுறுத்தல்கள்' எனும் வழிகாட்டி அறிவுறுத்தல்களுக்கு மேலதிகமாக இது வெளியிடப்பட்டுள்ளது.

பொதுவான செயற்பாடுகள்
இவ்வழிகாட்டி அறிவுறுத்தல்களின் நோக்கமாவது, கொவிட்-19 பரவும் பாதுகாப்பற்ற  சந்தர்ப்பத்தில் பொது மக்களுக்கு முக்கிய சேவையென கருதி சிகை அலங்கார நிலையங்கள், அழகுபடுத்தும் நிலையங்கள் என்பவற்றினால் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கும் பொருட்டு உதவுவதாகும்.

வேலைத்தளத்தின் முன்னாயத்த ஏற்பாடுகள் திருப்தியானவிடத்து, சுகாதார வைத்திய அதிகாரியினால் அலுவலகத்திலுள்ள தற்காலிக பதிவேட்டில் அவ்வேலைத்தளம் பதிவு செய்யப்பட்டு சேவையினை ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.

உரிய பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரியினால் சேவையை ஆரம்பிப்பதற்காக வழங்கப்பட்ட செல்லுபடியான அனுமதிப்பத்திரம் இன்றி சிகை அலங்கார நிலையங்களை ஆம்பிக்க முடியாது.

சேவை நிலைய ஏற்பாடுகள்
பெரிய தாபனங்களிடம்  மனித வள செயற்திட்டம்  உட்பட  எழுத்திலான கொவிட்-19 முன்னாயத்தப் பணிகள் மற்றும் பதில் நடவடிக்கைகள் தொடர்பான செயற்திட்டமொன்றிருத்தல் வேண்டும் என்பதுடன் அச்செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி மேற்பார்வை செய்து சான்றுபடுத்தும் பொருட்டு அதற்கென பொருத்தமான பிரத்தியேக பணியாளரொருவரை ஈடுபடுத்தலும் வேண்டும்.

சேவைக்காக அழைக்கப்படுபவர்  நிரந்தர அல்லது தனிப்படுத்தப்பட்ட விபரங்களை வழங்கக் கூடிய பணியாளராயிருப்பதை உரிமையாளர் அல்லது முகாமையாளர் உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும். பணியாளர்களின் முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் மற்றும் நெருங்கிய உறவினர்களின் விபரங்கள் உள்ளிட்ட தகவல்களைக் கொண்ட பதிவேடொன்று உரிமையாளர்  அல்லது  முகாமையாளரினால் பேணப்படல் வேண்டுமென்பதுடன் அப்பதிவேட்டின்  பிரதியொன்று பிரிவுக்குரிய பொது சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார வைத்திய அதிகாரிக்கு வழங்கப்படுதலும் வேண்டும்.

காயச்சல், இருமல், மூக்கிலிருந்து சளித்திரவம் வடிதல், தொண்டைத் தொற்று மற்றும் மூச்செடுத்தலில் சிரமம் போன்ற தீவிர (குறுங்காலத்தினுள் ஏற்பட்ட ) சுவாச நோய் இலட்சணங்களைக் கொண்ட நபர்கள்இ கடந்த 14 நாட்களுக்குள் புதிய கொரோனா தொற்று தொடர்பாக சந்தேகிக்கும் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட  நபருடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட நபர் மற்றும் கொரோனா தொற்றுள்ளதா என்பதை கணிக்கும் நோக்கில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் உள்ளிட்ட பிரிவினர் பணியாளர்கள் சேவைக்காக அழைக்கப்படலாகாது.

நோயுற்ற நபர் சேவைக்காக அறிக்கை செய்திருப்பின் அவரை உடனடியாக வீட்டிற்கு அனுப்ப வேண்டியது உரிமையாளர் அல்லது முகாமையாளரது பொறுப்பாகும்.

சேவைக்குரிய வளவுக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு நபரும் (வருகையாளர்களும் பணியாளர்களும்) பிரவேசிப்பதற்கு முன் சவர்க்காரமிட்டு கைகளைக் கழுவுதல் வேண்டும். சேவை வளவுக்குள் பிரவேசிக்கும் சந்தர்ப்பத்தில் அனைத்துப் பணியாளர்களினதும் உடல் வெப்பநிலை பரீட்சிக்கப்படல் வேண்டும் என்பதுடன் வெப்பநிலை 98.4 அல்லது 37 யை விட அதிகரித்துள்ளமை பற்றி அறிக்கை வெளியிடப்படும் பட்சத்தில் அந்த நபரை 10 – 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கச் செய்து மீண்டும் பரீட்சித்தல் வேண்டும். மீண்டும் வெப்பநிலை அதிகரித்த நிலையில் இருக்குமானால் அவர் திருப்பி அனுப்பப்படல் வேண்டும். இங்கு பாவிக்கப்படும் வெப்பமானி வைத்திய வெப்பமானியாகவிருத்தல் வேண்டும்.

சிகை அலங்கார நிலையங்களில் விசேட செயற்பாட்டு நடைமுறைகள்
சேவை பெறுனர்களுக்கு சேவை வழங்கும் போது முடிவெட்டுபவர் அல்லது அலங்காரம் செய்பவர் முகக் கவசமும் பாதுகாப்பு கண்ணாடி அல்லது கவசமும் அணிந்திருத்தல் வேண்டும்.

பாவிக்கப்பட்ட முகக் கவசம் மற்றும் டிசு' கடதாசிகளை அகற்றுவதற்காக பாதத்தினால் திறக்கக் கூடிய குப்பை தொட்டிகள் வழங்கப்பட வேண்டும்.

அலங்கார வேலை தவிர்ந்த ஏனைய நேரங்களில் அலங்காரம் செய்பவர்களுக்கும் சேவை பெறுனர்களுக்கும் இடையில் ஆகக் குறைந்தது ஒரு மீற்றர் இடைவெளி பேணப்படல் வேண்டும். ஒரு மீற்றர் இடைவெளி தூரத்தைப் பேணும் பொருட்டு சிகை அலங்கார நிலையங்களுக்குள் ஒரு தடவையில் அனுமதிக்கப்பெறும் சேவை பெறுனர்களின் தொகை கட்டுப்படுத்தப்படல் வேண்டும். சேவை பெறுனர்களுக்கு நேரத்தை ஒதுக்கி தேவையை பூர்த்தி செய்யக் கூடிய நடைமுறையொன்றை ஸ்தாபித்துக் கொள்ள வேண்டும்.

பௌதீக இடைவெளியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக  தளபாடங்களை மீளவும் ஒழுங்கு செய்து தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும். சிகை அலங்கார நிலையங்களுக்குள் பிரவேசிக்க காத்திருக்கும் நபர்கள்களின் தொகையைக் கட்டுப்படுத்தவும் சேவை பெறுனர்கள் தனது முறை வரும் வரை வெளியே அல்லது தனது வாகனத்தினுள் தரித்திருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்தோடு சேவை பெறுனர்கள் பணியாளர்களுக்கிடையிலான பௌதீக கொடுக்கல் வாங்கல்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right