திருகோணமலை,  கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஞ்சோலைச் சேனை பகுதியில், கட்டிட வேலைகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது, வீடொன்று சரிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் குறித்த இடத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது வீட்டுசுவர் விழுந்ததில் சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு சிறுவன் படுகாயமடைந்தார்.

இப்பரிதாப சம்பவம் கிண்ணியா -03 மாஞ்சோலைச் சேனை , ஆலீம் வீதி , இன்று (10.05.2020) காலை 8.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் ரணீஷ் - முஹம்மது-ஷான் கனி (வயது -04) எனும் சிறுவனே உயிரிழந்தவராவார் .

இவரது சகோதரான ரணீஸ் முஹம்மது - தாஜ் (வயது-02) எனும் சிறுவனே படுகாயமடைந்து கிண்ணியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட கிண்ணியா மரண விசாரணை அதிகாரி கே.ரீ.நிஹ்மத்துல்லா, வீட்டுச் சுவர் இடித்து விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாலேயே குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.