திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தாஹிர் நகர் பிரதேசத்தில் உள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகள் பயிற்சி பெற்ற நிலையத்தின் உரிமையாளர் நேற்று மாலை 6.30 மணியளவில் சி.ஐ.டி யின் சிறப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் மூதூர் பிரதச சபையின் முன்னாள் உபதவிசாளரான முகமட் ஹனிபா ஹாஜா மொகைதீன் (வயது 55) என்பவரென சி.ஐ.டி விஷேட பிரிவினர் தெரிவித்துள்ளனர்.நேற்று மாலை 4.00 மணியளவில் பயிற்சி நிலையத்தின் உரிமையாளரின் தோப்பூர் , பங்களா வீதியில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்ற சி.ஐ.டி யின் விஷேட பிரிவினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், ஹாஜா மொகைதீனின் இக்பால் நகர் பிரதேசத்தில் அமைந்துள்ள 30 வீடமைப்பு திட்டம் பகுதியில் அமைந்துள்ள அவரின் மற்றுமொரு வீட்டிற்கு அழைத்தச்சென்று அங்கு பயிற்சி வழங்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்திய பின்னர் தோப்பூர் வீட்டிற்கு அழைத்து வந்தபின் அவரை கைது செய்து கொழும்பிற்கு அழைத்துச் சென்றனர். 

கைது செய்யப்பட்ட ஹாஜா மெகைதீன் சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நல்லூர் நகர், தாகிர் நகர் பிரதேசத்தில் அரசாங்கத்தின் 15 ஏக்கர் காணியை பலவந்தமாக அபகரித்து பண்ணை ஒன்றை அமைத்து அதை பயங்கரவாதிகளின் பயிற்சி நிலையமாக நிர்வகித்து வந்ததன் அடிப்படையில் கைது இடம்பெற்றுள்ளது.

மேலும், இக்பால் நகர், அபுரார் நகர் 30 வீட்டுத்திட்ட பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றும், நல்லூர் பகுதியில் உள்ள தாகீர் நகர் பகுதியில் உள்ள 15 ஏக்கரில் அமைந்துள்ள மூன்று வீடுகளும், தோப்பூர்-4, பங்களா வீதியில் உட்பட்ட மூன்று வீடுகளில் கடந்த மாதம் முதல் சி.ஐ.டி யின் விஷேட பிரிவிரால் சோதனைக்கு உட்படுத்தியதன் அடிப்படையிலும் கடந்த வருடம் மாவனல்ல பிரதேசத்தில் புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்ட ஹாஜா மெகைதீனின் இடங்களில் ஆயுத பயிற்சி பெற்றதாக சி.ஐ.டி. யின் விஷேட பிரிவினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் கைது இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.