மிரட்டும் பெருந்தளம் ! கொரோனா மையமாக இருக்கின்ற போதும் பரந்துபட்ட ஒரு இடம் !

10 May, 2020 | 02:51 PM
image

-சுபத்ரா

இலங்கையில் கொரோனா பற்றிய செய்திகளில் இப்போது அதிகம் இடம்பிடித்திருப்பது வெலிசற கடற்படைத் தளம் தான்.

கொழும்புக்கு வடக்கே, உள்ள வெலிசறவில் உள்ள கடற்படைத் தளத்தில் பணியாற்றும், கடற்படைச் சிப்பாய் ஒருவர், விடுமுறையில் பொலன்னறுவவுக்குச் சென்றிருந்த போது, கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களைத் தேடத் தொடங்கிய போது தான், வெலிசற கடற்படைத் தளமே, இந்த தொற்றின் ஊற்றுவாய் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, வெலிசற கடற்படைத் தளம் முற்றாக முடக்கப்பட்டது. அங்குள்ள, 4000 கடற்படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வெலிசற கடற்படைத் தளத்தினுள்ளேயும், அங்கிருந்து விடுமுறையில் சென்றவர்களுமாக, தொடர்ந்து கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தப் பத்தி எழுதப்படுகின்ற போது, கடற்படையைச் சேர்ந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 367 ஐக் கடந்து விட்டது.

தினமும் வெலிசற கடற்படைத் தளம் குறித்தும், அங்கிருந்து கண்டுபிடிக்கப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறித்தும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இப்போது வெலிசற கடற்படைத் தளம் பற்றிய செய்திகள் இன்றும் விரிவாக வரத் தொடங்கியிருக்கின்றன.

அதாவது, வெலிசற கடற்படைத் தளத் தொகுதியில் உள்ள மகாசேன் தளத்தில் தான், அதிகளவான கடற்படையினர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி வெளியாகியிருகிறது.

இந்த நிலையில், வெலிசற கடற்படைத் தளத் தொகுதியில் எத்தனை தளங்கள் இருக்கின்றன, என்னென்ன வசதிகள் அங்கு உள்ளன என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது.

இலங்கைக் கடற்படையின் தளங்களிலேயே, மிகப் பெரியதென கூறக் கூடியது வெலிசற கடற்படைத் தளம் தான்.

ஆனால் இந்த தளம், கடலை அண்டியதாக இல்லை. இது ராகம, வத்தளை, வெலிசற ஆகிய நகரப் பகுதிகளுக்கு நடுவே, தரைப் பகுதியில் இருக்கிறது.

வெலிசற கடற்படைத் தளம் குறித்து இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அதிகளவு செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் அதன் விசாலமான பரப்பளவு பற்றிய கேள்விகள் அதிகம் எழுந்ததில்லை.

போர் நடந்து கொண்டிருந்த மற்றும் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட காலத்தில், கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 பேர், பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது, வெலிசற கடற்படைத் தளம் பற்றி அதிகளவு செய்திகள் வெளியாகின.

ஏனென்றால், கடத்தப்பட்ட இரண்டு பேர் பயணம் செய்த வாகனம், வெலிசற கடற்படைத் தளத்தில் தான், பாகங்களாகப் பிரித்துப் போடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இந்த ஆதாரங்கள் அந்த விசாரணைகளில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு முன்னதாக, வெலிசற கடற்படை முகாம் ஒரு தடுப்பு முகாமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஜேவிபி கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்டவர்களும், விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செயப்பட்டவர்களும் வெலிசற கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

ஜே.வி.பி. தலைவர் றோகன விஜேவீரவின் குடும்பத்தினர் வெலிசற கடற்படைத் தளத்துக்குள் தான் தங்க வைக்கப்பட்டனர்.

அதைவிட, கடற் சண்டைகளில் திருப்பத்தை ஏற்படுத்திய, சிறிய ரக Wave Rider படகுகளை வெலிசற கடற்படைத் தளத்தில் உள்ள படகு கட்டுமானத் தளத்தில் தான் கடற்படை வடிவமைத்து உற்பத்தி செய்தது.

பல நூறு படகுகள் அங்கு உற்பத்தி செய்யப்பட்டு, இப்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே, வெலிசற கடற்படைத் தளம் என்பது கொரோனாவினால் மாத்திரம் வெளிச்சத்துக்கு வந்த ஒன்று அல்ல.

ஆனால், இப்போது அதன் உண்மைப் பரிமாணம் பற்றிய கேள்விகள் அதிகம் எழுந்துள்ளன என்பது தான் உண்மை.

இலங்கைக் கடற்படையின் பிரதான தரைத் தளத் தொகுதிகளில் வெலிசற மிக முக்கியமானது. இங்கு தான், கடற்படையின் பிரதான தரைவழி கட்டமைப்புகள் உள்ளன. இதற்குள், எஸ்.எல்.என்.எஸ். மகாசேன், எஸ்.எல்.என்.எஸ். லங்கா, எஸ்.எல்.என்.எஸ். கெமுனு, எஸ்.எல்.என்.எஸ். தக்சிலா என நான்கு பிரதான தளப் பகுதிகள் இருக்கின்றன.

இதில், எஸ்.எல்.என்.எஸ். மகாசேன, முக்கியமானது. இங்கு தான் இப்போது அதிகளவிலானோருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்த தளம் கடற்படையின் பிரதான விநியோக மையம் ஆகும்.

கடற்படைக்குத் தேவையான பொருட்களை கையாளுவது, மற்றும் கடற்படையின் பொறியியல் கட்டமைப்புகள் அனைத்தும் இந்த தளத்தில் தான் இருக்கின்றன. இங்கு தான் படகுகள் வடிவமைப்பு, படகுகளுக்கான இயந்திரங்களை சீரமைப்பது, திருத்துவது உள்ளிட்ட, தொழில்நுட்ப, மற்றும் பொறியியல் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தொற்றுக்குள்ளான கடற்படையினரின் அதிகம் பேர் இவ்வாறான தொழில்நுட்ப பணிகளில் ஈடுபடுபவர்கள் தான் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அடுத்து, எஸ்எல்என்எஸ் லங்கா- இது தான் கடற்படையின் தொண்டர் படைகளின் தலைமையகம். இதுவும் வெலிசற கடற்படைத் தளத் தொகுதியின் முக்கியான ஒரு அம்சமாக உள்ளது.

இலங்கைக் கடற்படையினரின் நிரந்தரப் படையினருக்கு உதவியாக, தொண்டர் படையைச் சேர்ந்தவர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான தலைமையகம் மற்றும் கட்டளை அமைப்புகள் அனைத்தும் வெலிசற கடற்படைத் தளத் தொகுதியில் உள்ள எஸ்.எல்.என்.எஸ். லங்கா தளத்தில் இருந்தே, மேற்கொள்ளப்படுகின்றன.

வெலிசற கடற்படைத் தளத் தொகுதியில் உள்ள மூன்றாவது, தளம், எஸ்.எல்.என்.எஸ். கெமுனு.இது, ஒரு தளம் அல்ல, ஆனால் இந்த பெருந்தளத்தின் முக்கியமான பகுதி.

வெலிசற கடற்படைத் தளத்தில் பணியாற்றும், அல்லது நிறுத்தப்பட்டுள்ள கடற்படையினருக்கான தங்குமிடக் குடியிருப்புத் தொகுதிகளைக் கொண்டது இது.

அத்துடன், இந்த தளத்திலேயே, தடுப்பு முகாம் தொகுதிகளும் இருக்கின்றன. இங்கு தான் அதிகளவான கடற்படையினரும், அவர்களின் குடும்பத்தினரும் தங்கியுள்ளனர்.

இந்த தளத்தினுள், திருமணம் செய்த கடற்படை அதிகாரிகளுக்கான 196 குடியிருப்புத் தொகுதிகளும் இருக்கின்றன என்பது முக்கியமாக குறிப்பிடக் கூடியது.

கொரோனா தொற்றினால், முடக்கி வைக்கப்பட்டுள்ள இந்த தளத்தினுள் தான், அதிகளவானோர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர். அடுத்து வெலிசற கடற்படை முகாமின் இன்னொரு முக்கியமான தளம், எஸ்.எல்.என்.எஸ். தக்சிலா. இது, கடற்படையின் புத்தாக்க பயிற்சி நிறுவகம்.

புதிய கண்டுபிடிப்புகள், வடிவமைப்புகளுக்கு இங்கே பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இவை தவிர, வெலிசற கடற்படைத் தளத் தொகுதிக்குள் பிரதானமான இன்னொரு பகுதி உள்ளது. கடற்படையின் தள மருத்துவமனையே அது. 

இலங்கைக் கடற்படையின் பிரதான மருத்துவமனையான இதில், 300 படுக்கைகளுடன், அதி நவீன வசதிகளைகள் உள்ளன. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 150 இற்கும் அதிகமான கடற்படையினருக்கு வெலிசற கடற்படை மருத்துவமனையில் தான் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 

இதைவிட, வெலிசற கடற்படைத் தளத் தொகுதிக்குள், கடற்படையின் முதல் தர கிரிக்கெட் மைதானம், கோல்ப் மைதானம், ஆகியனவும் இருக்கின்றன.

அத்துடன், சர்வதேச தரம் வாய்ந்த, துப்பாக்சிக் சூட்டு பயிற்சி தளமும் இந்த தளத்தினுள் உள்ளது.

வெலிசற கடற்படைத் தளம் கொரோனா மையமாக இருக்கின்ற பொதும், அது ஒரு பரந்துபட்ட ஒரு இடம். இந்த தளத்தில் எல்லா பகுதிகளுமே கொரோனா தொற்று ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளப்படுத்தப்படவில்லை.

குறிப்பாக, எஸ்எல்என்எஸ் மகாசேன் தளமே அதிகளவில் கொரோனா தொற்றாளர்களைக் கொண்டிருக்கிறது. இந்த தளத்தில் ஏற்பட்டுள்ள தொற்றினால், கடற்படைக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனை எப்படியாவது வெலிசற தளத்துக்கு அப்பால் பரவ விடாமல் தடுப்பதே கடற்படைத் தலைமையின் முக்கியமான பொறுப்பாக உள்ளது.

இப்போது, கடற்படையினர் என்றாலே, சாதாரண மக்கள் பயந்து ஒதுங்குகிறார்கள். இந்த நிலையில் வெலிசற என்றால் இன்னும் ஓடி ஒதுங்கும் நிலையே காணப்படுகிறது. வெலிசற கடற்படைத் தளம் என்பது ஜே.வி.பி. காலத்திலும், பின்னர் புலிகளுடனான போர்க்காலத்திலும், அச்சத்துடன் பார்க்கக்ப்பட்ட ஒரு காலம் இருந்தது. கொரோனாவுக்குப் பின்னர் மீண்டும் அவ்வாறானதொரு நிலை தான் தோன்றியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right