(நா.தனுஜா)

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தனக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனம் என்பவற்றைப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும் மீளக் கையளித்து விட்டார்.

அது மாத்திரமன்றி கடந்த மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாகக் கிடைக்கப்பெறக்கூடிய எந்தவொரு வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பு அவருக்கு இல்லை என்று அவரது ஊடகப்பிரிவு தெரிவித்திருக்கிறது.

இது குறித்து விளக்கமளிக்கும் வகையில் கரு ஜயசூரியவின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அரசாங்கத்தினால் கடந்த மார்ச் மாதம்  சமர்ப்பிக்கப்பட்ட  அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைவாக அமைச்சர்கள் (இராஜாங்க அமைச்சர்கள் உள்ளடங்கலாக) தேர்தல் முடிவுறும் வரையில் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனத்தைப் பயன்படுத்துவதற்கு உரிய முறையொன்று வகுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி முன்னாள் சபாநாயகருக்கும் இந்த வரப்பிரசாதங்கள்  கிடைக்கப்பெறுவதாகவே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் கரு ஜயசூரிய தனக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனம் என்பவற்றைப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும் மீளக் கையளித்து விட்டார். அதுமாத்திரமன்றி இந்த அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாகக் கிடைக்கப்பெறக்கூடிய எந்தவொரு வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பு அவருக்கு இல்லை என்பதையும் தெரியப்படுத்துகிறோம்.