10 ஓவர்கள் கிரிக்கெட் போட்டி ஒலிம்பிக் போட்டிக்கு  பொருத்தமானதாக இருக்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த ஒயின் மோர்கன் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் தற்போது டெஸ்ட், சர்வதேச ஒருநாள் போட்டி, சர்வதேச இருபதுக்கு 20  என மூன்று வடிவிலான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டி அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.

இதற்கிடையே 10 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியும் லீக் அளவில் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு 10 ஓவர்கள் கிரிக்கெட் போட்டிதான் பொருத்தமானது என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் ஒயின் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஒயின் மோர்கன் கூறுகையில்,

“ ஒலிம்பிக் மற்றும் பொதுநலவாய விளையாட்டு விழா போன்ற போட்டிகளில் 10 ஓவர்கள் கிரிக்கெட் பொருத்தமானதாக இருக்கும். ஏனைய வகை கிரக்கெட்டை விடவும் 10 ஓவர்கள் கிரிக்கெட் போட்டி இந்த வாய்ப்பை வழங்குகிறது. ஒட்டுமொத்த போட்டியையும், 10 நாட்களில் முடித்து விடலாம். இதன்மூலம் கிரிக்கெட்டுக்கு கூடுதலான வாய்ப்புகள் கிடைக்கும். 8 முதல் 10 நாட்களில் முடிவடைகிற போட்டிதான் எல்லாவற்றிற்கும் ஏற்றதாக இருக்கும். மேலும் அதிக பொழுது போக்கையும் ரசிகர்களுக்கு அளிக்கும்” என்றார்.

நடப்பாண்டுக்கான அபுதாபி டி10 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் நவம்பர் 19 முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறும் என அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அபுதாபி டி10 லீக் போட்டியில் மராத்தா அரேபியன்ஸ் அணி வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.