புத்தளத்தில் விற்பனைக்காக வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் போதை ஒழிப்பு பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை (08.05.2020) புத்தளம் கடுமையான் குளம் பகுதியில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 3 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான 4 கிலோ 368 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இவ்வாறு ஹெரோயின் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இந்நிலையில், அலுமாரி ஒன்றுக்குள் மிகவும் சூட்சகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஹெராயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் வியாபாரிகள் மூவருடன், அதற்கு உதவிபுரிந்த மூவரும், அலுமாரி தயாரித்துக்கொடுத்த ஒருவருமாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.