அமெரிக்க துணை ஜனாதிபதி  மைக் பென்ஸின் ஊடகச் செயலாளரான கேட்டி மில்லருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான கேட்டி மில்லர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முக்கிய ஆலோசகரான ஸ்டீபன் மில்லரின் மனைவியாவார்.

கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் கேட்டி மில்லர், துணை ஜனாதிபதி மைக் பென்ஸுடன் தொடர்பிலிருந்துள்ளார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கேட்டி மில்லர் சந்தித்தது இல்லை என்று வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கேட்டி மில்லருடன் தொடர்புடைய 6 பேர் நேற்று துணை ஜனாதிபதி மைக் பென்ஸுடன் விசேட விமானத்தில் டெஸ் மொய்ன்ஸ் (Iowa) நகருக்கு பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் அவர்கள் 6 பேரும் அந்த பயணத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் எவருக்கும் அறிகுறி இல்லாத நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனாதிபதி ட்ரம்புக்கு பாதுகாப்பு அளித்து வரும் இராணுவ வீரர் ஒருவருக்கு இதே வாரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதன் மூலம் வெள்ளை மாளிகையில் பணியாற்றும் ஊழியர்களில் கேட்டி மில்லருடன் சேர்த்து இதுவரை இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிபரங்களின்படி,  அமெரிக்காவில்  1,283,929 பேர் கொரேனா தொற்றினால் பாதிப்படைந்துள்ளதுடன்,77,180 பேர் உயிரிழந்துள்ளார்கள்.