(எம்.மனோசித்ரா)

கொரோனா ஒழிப்பிற்காக அரச ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு தொகை கோரப்பட்டுள்ளமையை தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் நாம் முற்றாக எதிர்க்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை உருவாக்கிவிட வேண்டாம் என்று அரச அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால் காந்த தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா ஒழிப்பிற்காக அரச ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு தொகை கோரப்பட்டுள்ளமையை தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் நாம் முற்றாக எதிர்க்கின்றோம். யாரும் இதனை வழங்கக் கூடாது.

அரசாங்கம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. இது ஏனைய விடயங்கள் போன்று சாதாரணமானதல்ல. எனவே கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்க இடமளிக்க வேண்டாம் என்று அரச அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

அமைச்சர்களினதும் இராஜாங்க அமைச்சர்களினதும் ஏனைய அதிகாரிகளினதும் சம்பளத்தில் கொரோனா ஒழிப்பிற்கான தொகையை அறிவிட்டதன் பின்னர் கீழ் மட்ட அதிகாரிகளிடம் வருமாறு கோருகின்றோம் என்றார்.