மனித வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் கொரோனா வைரஸ் தாக்கி இடையூறுகளை ஏற்படுத்தி இருக்கின்றது. இயல்பு நிலையிலான வாழ்க்கைச் செயற்பாடுகளுடன், சமூக, பொருளாதார, அரசியல் செயற்பாடுகளையும் ஒழுங்கு நிலைமைகளையும் மோசமாகப் பாதித்திருக்கின்றது. அந்த வகையில் ஆன்மீகச் செயற்பாடுகளையும் அது விட்டு வைக்கவில்லை.
பொது வெளியில் மனிதர்கள் இயல்பாக மூச்சுவிட முடியாது. அதற்கு முகக்கவசப் பாதுகாப்பு அவசியம் என்ற புதிய விதிமுறையை கொரோனா வைரஸ் அறிமுகப்படுத்தி இருக்கின்றது. அதனைக் கட்டாயமாக்கி இருக்கின்றது. முகக் கவசம் இல்லையேல் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலைமையை உருவாக்கி உள்ளது.
ஒருவருடன் ஒருவர் கைகுலுக்க முடியாது. நெருங்கிப் பழக முடியாது. கூட்டமாகக் கூடியிருக்கவும் செயற்படவும் முடியாது என்பது கொரோனா வகுத்துள்ள வாழ்க்கை நெறியாக அறிமுகமாகி உள்ளது.
இலகுவில் தொற்றிப் பரவுகின்ற கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு முகக்கவசம் அவசியம். இடைவெளி பேணுதல் அவசியம். மொத்தத்தில் தனித்திருத்தல் வேண்டும். கொரோனா வைரஸை சமூகத்தில் இருந்தும் நாட்டில் இருந்தும் இல்லாதொழிப்பதற்குக் கட்டாயமாக அனைவரும் இதனைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த நடைமுறை சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுரையோ ஆலோசனை மட்டுமல்ல. அராசங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ள கட்டாய நெறிமுறைகளுமாகும்.
குடும்பச் செயற்பாடாக இருந்தால் என்ன, சமூக, பொருளாதார, அரசியல் செயற்பாடாக இருந்தால் என்ன எல்லா நடவடிக்கைகளிலும் மக்கள் ஒன்று கூட வேண்டி உள்ளது. நெருங்கி இருக்க வேண்டியதும் அவசியம். ஆனால் இவ்வாறு ஒன்று கூடுவதையும், நெருங்கி இருப்பதையும் கொரோனா வைரசுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகள் தடை செய்கின்றன.
இந்த நிலையில் சமூகமாக ஒன்று கூட முடியாது.. கல்விச் செயற்பாடுகளுக்காக பாடசாலைகளிலும் கல்வி நிலையங்களிலும் வகுப்பறைகளிலும் மாணவர்கள் ஒன்று சேர முடியாது. இந்த நிலைமை மாணவர்களின் இயல்பான கல்விச் செயற்பாடுகளைப் பாதித்திருக்கின்றது.
ஒன்றுகூட முடியாத காரணத்தினால் அனைத்துச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் செய்ய முடியாது. ஆன்மீக வழிமுறைகளில் ஈடுபடவும் முடியாது. இந்த வகையில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதையடுத்து, நான்கு பண்டிகைகளை மக்கள் கொண்டாட முடியாமல் போயிருக்கின்றது.
நான்கு மதங்களைச் சேர்ந்த பண்டிகைகளிலும் பாதிப்பு
முதலாவது கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகை அதனையடுத்து தமிழ் சிங்கள சித்திரைப்புத்தாண்டு பண்டிகை. இஸ்லாமியர்களின் நோன்புடன் கூடிய றம்ழான் (ஈதுள் பித்துர்) பண்டிகை. நான்காவதாக பௌத்தர்களின் வெசாக் பண்டிகை. இந்தப் பண்டிகைகளை அவற்றின் வழமையான ஒன்றுகூடல் மற்றும் ஏனைய செயற்பாடுகளுடன் கிறிஸ்தவ, இந்து, பௌத்த, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த மக்கள் கொண்டாட முடியாத நிலைமையை கொரோனா வைரஸ் உருவாக்கிவிட்டது.
ஈஸ்டர் பண்டிகை நாளன்று 2019 ஆம் ஆண்டு அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களினால் நிலைகுலைந்து போயிருந்த கிறிஸ்தவ மக்கள் 2020 ஆம் ஆண்டிலும் அதனை இயல்பான மன நிலையில் கொண்டாட முடியவில்லை. கடந்த வருட பண்டிகையில் பிரார்த்தனை நேரத்தில் தேவாலயங்கள் குருதியில் நனைந்து, கட்டிடங்கள் உடைந்து நொறுங்கி இறைவனின் அருளைப் பெற இருந்தவர்கள் உடல்கள் சிதறி பலியாகிப் போன சோகத்தின் வடு மாறாத நிலையில் இருந்தார்கள்.
கடந்த வருடம் பிரார்த்தனையில் ஈடுபட முடியவில்லையே என்ற ஏக்கத்தை இந்த வருட ஈஸ்டர் திருநாளும் போக்கவில்லை. ஆலயங்களுக்குச் சென்று பிரார்த்தனைகள் வழிபாடுகளில் ஈடுபட முடியாதவாறு கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருந்த முடக்க நிலைமை தடைவிதித்திருந்தது. இதனால் கடந்த வருட உயிரிழப்புக்களின் துயர மனச்சுமையுடன் அவர்கள் வீட்டில் இருந்தவாறே பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார்கள்.
சித்திரை மாதத்து, தமிழ் சிங்களப் புத்தாண்டு பண்டிகை இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு அதி முக்கியமான பண்டிகையாகும். தமிழ் மக்களும், சிங்கள மக்களும் தமது மத ரீதியான கலசாரத்திற்கமைய புதிய வருடத்தில் அடியெடுத்து வைக்கின்ற பண்டிகை அது.
அந்தப் பண்டிகையின்போது குளிப்பது, இறைவனை வணங்குவது, புதிய வருடத்திற்கான முதல் உணவை உட்கொள்ளுவது என்ற முக்கிய அம்சங்கள் அனைத்தும் அதற்கென பஞ்சாங்க முறைப்படி வகுத்து ஒதுக்கப்பட்ட நேரத்திலேயே இடம்பெற வேண்டும். அந்த ஒழுங்கிற்கு அமைய மக்கள் அந்த காரியங்களில்; ஈடுபடுவார்கள்.
இந்தப் பண்டிகைக்காக அணிகின்ற உடைகளும் என்னென்ன நிறத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நியதியும் கூட பஞ்சாங்க வழிமுறையில் குறிப்பிட்டமைக்கு அமைவாகவே வாங்கி அணியப்படும். அது மட்டுமல்லாமல் தனி மனித, குடும்ப நிலையிலான பொருளாதாரம் புதிய வருடத்தில் சிறப்புற்றிருப்பதற்காக கைவிசேசம் கொடுத்தல் அல்லது கைவிசேசம் பெற்றுக்கொள்ளுதல் என்ற மிக முக்கியமான முதலாவது பண கொடுக்கல் வாங்கல் செயற்பாடும் அதற்கென குறித்தொதுக்கப்பட்ட நல்ல நேரத்திலேயே இடம்பெறும்.
இந்தக் காரியங்களுக்கான புண்ணிய காலமும் நல்ல நேரமும் பஞ்சாங்கத்தில் கணித்து வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அதனையொட்டி அனைவரும் சித்திரைப் புத்தாண்டு தினத்தை ஆரம்பித்து பண்டிகையைக் கொண்டாடுவார்கள். குடும்பத்துடன் இணைந்து உணவருந்தியும் உறவினர்களுக்கு விருந்தளித்தும், உறவினர்களின் வீடுகளில் விருந்து உண்டும் கொண்டாடி களிப்பார்கள்.
நோன்புப் பெருநாள்
ஆனால் சித்திரைப் புத்தாண்டு காலத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாகத் தொற்றிப் பரவிக்கொண்டிருந்தது. முடக்க நிலையும் ஊரடங்கு உத்தரவும் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் அந்தப் பண்டிகையைக் கொண்டாடிய இந்துக்களும் பௌத்தர்களும் வீடுகளில் முடங்கி, ஆலயங்களுக்குச் செல்ல முடியாத நிலையில் மிகவும் அமைதியான முறையில் அனுட்டித்தார்கள்.
இந்தப் பண்டிகையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகிய 'நல்லநேரக் கொடுக்கல் வாங்கல்களை' அநேகமானவர்கள் தங்களுடைய குடும்ப அங்கத்தினர்களுக்குள்ளேயே மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று. இதனால் இந்த வருடம் முழுதுமான கொடுக்கவல் வாங்கல்களும், தங்களுடைய பொருளாதார நிலைமையும் எப்படி இருக்குமோ என்ற அச்சம் பலருடைய மனங்களில் எழுந்திருந்தது.
இந்து பௌத்த மக்களுக்கு அடுத்ததாக இஸ்லாமியர்களின் நோன்புப் பெருநாள் ஏப்ரல் 25 ஆம் திகதி தொடங்கியது. றம்ழான் என குறிப்பிடப்படுகின்ற ஈதுள் பிதுர் பண்டிகை இஸ்லாமியர்களுக்கு முக்கியமானது. ஒரு மாத காலம் உபவாசம் இருந்து ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபட்டு, அந்தப் பண்டிகையை அவர்கள் கொண்டாடுவார்கள்.
கொரோனா வைரஸின் கட்டுப்பாட்டு நிலைமை காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள இஸ்லாமியர்கள் நோன்பு கால வழக்கப்படி தினசரி பள்ளிவாசல்களில் ஒன்றுகூடி பிரார்த்தனையில் ஈடுபட முடியவில்லை. ஒருவருக்கொருவர் இடைவெளியைப் பேண வேண்டும் என்பதற்காக மக்கள் ஒன்று கூடமுடியாத நிலைமையே இதற்குக் காரணம்.
அதேவேளை நோன்புப் பெருநாளின் மற்றுமொரு முக்கிய அம்சமாகிய பள்ளிவாசல்களில் கஞ்சி (அன்னதானம்) வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்வதும் தடைபட்டிருக்கின்றது. நோன்புப் பெருநாளை முன்னிட்டு உலமா சபையினர் விடுத்துள்ள வேண்டுகோளில் பள்ளிவசசல்களில் பிரார்த்தனைக்காக ஒன்று கூடுவதையும் கஞ்சி வழங்கும் செயற்பாட்டையும் மேற்கொள்ள வேண்டாம் என்று கோரப்பட்டிருக்கின்றது.
கொரோனா வைரஸ் பரவல் நிலைமையும் நோய்த்தாக்கமும் தொடருமேயானால், மே மாதம் 25 ஆம் திகதியளவில் வரவுள்ள றம்ழான் (ஈதுள் பிதுர்) பண்டிகையின்போதும் பள்ளிவாசல்களில் ஒன்றுகூடி பிரார்த்தனை செய்ய முடியாத நிலைமையே ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீடுகளில் முடங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதனால், நோன்பு காலத்தில் கட்டாயம் பள்ளிவாசலுக்குச் சென்று பிரார்த்தனைகளில் ஈடுபட முடியாதிருக்கின்றது என்று இஸ்லாமிய நண்பர் ஒருவர் கவலை தெரிவித்தார்.
வெசாக் பண்டிகை
ஆனாலும் கொரோனாவினால் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது போலவே இந்தப் பண்டிகைக்கான பருவ காலத்தில் சில நன்கைளும் விளைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக தங்களுடைய இஸ்லாமிய மத விதிமுறைகளுக்கமைவான சடங்குகளில் அதீத செயற்பாடுகள் இடம்பெறுவது தடுக்கப்பட்டிருக்கின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.
நோன்பு காலத்தில் பள்ளிவாசல்களில் பெரும் செலவு செய்து தயாரிக்கப்படுகின்ற கஞ்சியை பிரார்த்தனைக்காக வருபவர்கள் தேவைக்கு அதிகமாக வீடுகளுக்குக் கொண்டு சென்று விரயமாக்குவது தடைபட்டிருக்கின்றது. இதன் மூலம் பண்டிகைக் காலத்தில் உணவு வீணாக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
அத்துடன் ஈதுள் பிதுர் பண்டிகையையொட்டி மேற்கொள்ளப்படுகின்ற அலங்காரச் செயற்பாடுகளினால் ஏற்படுகின்ற மின்சார இழப்பு பணவிரயம் என்பதும் தவிர்க்கப்பட்டிருக்கின்றது என்பதையும் அவர் குறி;ப்பிட்டார்.
அது மட்டுமல்லாமல் நோன்பு காலத்தில் கூடுதலாக இறை சிந்னையுடன் இருக்க வேண்டும். மனமொன்றி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற நியதியை அமைதியாகவும் கருத்தொருமித்தும் கடைப்பிடிப்பதற்கு இப்போதைய கொரோனா அச்சுறுத்தல் நிலைமை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் திருப்தி வெளியிட்டார்.
கடந்த இரண்டு வார நோன்பு காலப்பகுதியில் அமைதியாக வீட்டில் இருந்தவாறு குர் ஆனை மனமொன்றித்து ஓத முடிந்துள்ளதாகவும் அமைதியாகப் பிரார்த்தனையில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. ஆகவே கொரோனா வைரஸ் ஆன்மீகச் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்பட்டிருந்தாலும், அதனால் விளைந்துள்ள நன்மைகளை மறக்க முடியாது. மறைத்துவிடவும் முடியாது என்றார் அந்த இஸ்லாமிய நண்பர்.
இஸ்லாமியர்களின் நோன்பு காலத்திலேயே பௌத்த மக்களின் அதிமுக்கிய பண்டிகையாகிய வெசாக் பண்டிகைத் தினமும் இந்துக்களின் சித்திரா பௌர்ணமி பண்டிகைத் தினமும் நாட்காட்டியில் இடம்பெற்றிருந்தன. இந்த இரண்டு பண்டிகைகளைக் கொண்டாடுவதிலும் இடர்ப்பாடுகள் நேர்ந்துள்ளன.
வெகாக் பண்டிகை பௌத்தர்களின் பண்டிகையாக இருந்த போதிலும், இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடுகின்ற ஒரு தேசிய பண்டிகையைப் போன்று முக்கியத்துவமளித்து கொண்டாடப்படுவதற்குரிய நடவடிக்கைகள் அரசினால் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
பௌத்த விகாரைகளில் மட்டுமல்லாமல் அரச அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களிலும் கூட பௌத்த கொடிகளைக் கட்டி, வெசாக் கூடுகளைக் கொண்ட அலங்காரங்கள் செய்யப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிடுவதும் வழமையான ஒரு செயற்பாடாகக் கைக்கொள்ளப்படுகின்றது.
பௌத்தர்கள் அல்லாத பிறமதங்களைச் சேர்ந்தவர்கள் இத்தகைய தருணங்களில் மிகுந்த மனக்கஸ்டத்துடன், அரச உத்தரவுக்கும் மேலதிகாரிகளின் பணிப்புரைகளுக்கும் அச்ச உணர்வுடன் இந்தக் காரியங்களில் ஈடுபடுவார்கள்.
பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழ வேண்டும் என்ற தேவை இல்லாத போதிலும், ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் வாழ்கின்ற பிரதேசங்களும் இந்தப் பண்டிகைக்;காக விழாக்கோலம் பூண்டிருக்கும். பலவர்ணத் தோரணங்கள் பௌத்த மத அடையாளத்தைப் பிரதிபலிக்கின்ற பதாதை வடிவிலான அலங்காரங்கள் என்பன பிரதான வீதிகளுக்குக் குறுக்காக நிறைந்திருக்கும். பௌத்த கொடிகளும் பெரிதும் சிறிதுமாகத் தாராளமாகப் பறக்கவிடப்பட்டிருக்கும்.
குறிப்பாக வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மன்னார் போன்ற முக்கிய தமிழ் நகரங்களும் வடபகுதியை தென்பகுதியுடன் இணைக்கின்ற பிரதான நெடுஞ்சாலையாகிய ஏ9 வீதி உட்பட பிரதான வீதிகள் இத்தகைய அலங்கரிப்பின் நிறைந்திருப்பது வெசாக் பண்டிகையின்போது சாதாரண காட்சியாக இருக்கும்.
பண்டிகை நேர அன்புத் தொல்லை
இதனால் வெளியிடங்களில் இருந்து வருபவர்களுக்கு இந்தப் பிரதேசங்கள் முழுதுமே பௌத்த மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றுகின்ற மக்கள் வாழ்கின்ற பகுதிகளாகவே தெரியும். ஆனால் உண்மையில் வவுனியா புறநகர்ப்புறம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பௌத்த மக்களும் இல்லை. சிங்கள மக்களும் இல்லை. ஆனால் ஆங்காங்கே என்ற ரீதியிலானாலும் நீக்கமற நிறைந்திருக்கின்ற இராணுவத்தினரின் கடமை நேர நடமாட்டங்களையும், சாதாரண நடமாட்டத்தையும் காண முடியும்.
ஆனால் சிங்கள பௌத்த பொதுமக்களின் குடியிருப்புக்கள் அறவே இல்லாத நிலையில் வருடந்தோறும் இடம்பெறுகின்ற இத்தiகைய வெசாக் தினத்துக்கான அலங்காரங்கள் தங்களை பௌத்த மதம் வலிந்து ஆக்கிரமித்திருக்கின்றதே என்ற உணர்வுக்கே இந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் ஆழ்ந்திருப்பார்கள்.
ஆங்காங்கே இருக்கின்ற இராணுவ முகாம்களுக்கு முன்னால் சிலவேளைகளில் வெசாக் தினத்தின் போது பௌத்த மக்கள் நடத்துகின்ற வீதியோர அன்னதான சாலைகளும், தாகசாந்திக்கான குளிர்பான நிலையங்களும் அமைக்கப்பட்டிருக்கும். அதேவேளை அனைத்து வீதித்தடை பொலிஸ் காவலரண்களிலும், பொலிஸ் நிலையங்களுக்கு எதிரிலும் இந்த அன்னதான சாலைகள் நிறுவப்பட்டிருக்கும்.
இந்த நிலையங்களில் சிவிலுடை பொலிசார் மற்றும் படையினரும், சீருடை தரித்த சிலரும் வீதியில் செல்கின்றவர்களை வழிமறித்து உணவருந்திச் செல்லமாறும், குளிர்பானம் அருந்திச் செல்லுமாறும் வற்புறுத்துவார்கள். ஏ9 வீதி உட்பட பிரதான வீதிகள் எங்கும் நிறைந்திருக்கின்ற போதிலும் தனியார் வாகனங்களிலும் பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் செல்பவர்கள் ஒவ்வொரு நிலையத்திலும் வழிமறிக்கப்பட்டு விருந்தோம்பலுக்கு உட்படுத்தப்படுவார்கள். பண்டிகை நேரத்தில் இது நாடெங்கிலும் இடம்பெறுகின்ற சாதாரண நடவடிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வெசாக் பண்டிகைத் தின அன்புத் தொல்லையில் இருந்து விடுபட்டு பிரயாணத்தை மேற்கொள்வதென்பது அந்த இரண்டு அல்லது மூன்று தினங்கள் மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும். சில வேளைகளில் அது உணர்வுகளைப் பாதிப்பதாகவும் அமைந்துவிடுவதுண்டு. ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் வெசாக் பண்டிகைக்கால ஆக்கிரமிப்பை தனதாக்கி வடபகுதி மக்களை வெசாக் தின அன்புத் தொல்லையில் இருந்து விடுதலை பெறச் செய்துள்ளது.
அதிரடியாக உணர்த்தியுள்ளது
சிங்கள பௌத்தர்களே இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் என்பதை ஏனைய இன சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அதனை எவரும் சவாலுக்கு உட்படுத்தியதில்லை. உட்படுத்தப் போவதுமில்லை. ஆனால் சிங்கள மக்களே பெரும்பான்மையானவர்கள் என்பதை அரசாங்கமும் தீவிரப் போக்குடைய பௌத்த மதத் தலைவர்களும் தங்களால் இயலுமான இடங்களிலும் இயலுமான சந்தர்ப்பங்களிலும் ஆக்கிரமிப்பு வடிவில் வெளிப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள்.
சிறுபான்மை இன மக்களினாலும், சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களினாலும் பௌத்த மதத்திற்கும் சிங்கள மக்களுக்கும் அச்சுறுத்தலும் நெருக்கடியும் ஏற்பட்டிருப்பதுபோன்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தி மத ரீதியிலும் பேரின ரீதியிலுமான ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் வழமையான நடவடிக்கையாக மாறியுள்ளது.
ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து வெசாக் பண்டிகை வாரத்தை உள்ளடக்கிய காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள முடங்கியிருத்தல் நடவடிக்கையானது நிலைமையைத் தலைகீழாக்கியுள்ளது. வீதிகளில் தோரணங்கள் இல்லை. அலங்காரங்கள் இல்லை. அன்னதான சாலைகள் இல்லை. தண்ணீர்ப்பந்தல்கள் இல்லை. உண்ணீர் உண்ணீர் என்று விழுந்து விழுந்து உபசரிப்போரும் இல்லை. இது ஒரு வகையில் அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஆறுதலைத் தந்துள்ளது என்றே கூற வேண்டும்.
ஆனாலும் மத ரீதியான முக்கியதொரு பண்டிகைகளின்போது ஆலயங்களுக்கும் கோலில்கள், பள்ளிவாசல்கள், பௌத்த விகாரைகளுக்கோ வழிபடுவதற்கும் பிரார்த்தனையில் ஈடுபடுவதற்கும் செல்ல முடியாதிருப்பது கவலைக்குரியது.
குறிப்பாக கொரோனா வைரஸ் போன்ற கொள்ளை நோய்த் தொற்றுப் பேரிடரின்போது ஆலயங்கள், கோவில்களை உள்ளிட்ட அனைத்து வணக்கத்தலங்களும் செயலற்றுப் போயிருப்பது வேதனைக்குரியது.
இதன் மூலம் மக்களின் ஆன்மீகச் செயற்பாடுகளை கொரோனா மோதி மிதித்திருப்பதும் துயரத்துக்கு உரியது. அதேவேளை மதங்களை முதன்மைப்படுத்தி சக மனிதர்களை வேறுபடுத்திப் பார்ப்பதும், தாழ்த்தி நடத்துவதும், மத ரீதியாக ஆக்கிரமிப்புச் செய்வதும் ஒரு பேரிடர் காலத்தில் எந்தவித பயனையும் தரமாட்டாது. இடர் களைய உதவவும் மாட்டாது என்பதை கொரோனா வைரஸ் அதிரடியாக உணர்த்தி இருப்பதையும் காண முடிகின்றது.
- பி.மாணிக்கவாசகம் -
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM