இலங்கையின் நிலாவெளி மற்றும் மன்னார் கடற்கரைகளில் மீட்கப்பட்ட இருவேறு சடலங்கள் இந்திய பிரஜைகளினுடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் இந்திய உயரிஸ்தானிகராலயத்துக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர, சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்வதாக குறிப்பிட்டார்.

 நிலவெளி கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த போது அந்த சடலத்துக்கு அருகில் இருந்து இந்திய அடையாள அட்டை ஒன்றை கண்டெடுத்துள்ளனர். இந் நிலையிலேயே அந்த சடலம் இந்தியர் ஒருவருடையதா என்ற  சந்தேகம் அதிகரித்துள்ளது.

இதனிடையே தலை மன்னார் பிரதேசத்தில் கரையொதுங்கிய சடலம் ஒன்று தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அந்த சடலத்தின் தோள் பட்டையில் குத்தப்பட்டிருந்த பச்சையை வைத்து அது இந்தியர் ஒருவருடையதாக இருக்க வேண்டும் என சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும் இவ்விரு சடலங்களும் நேற்று மாலைவரை அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.

சடலங்கள் மன்னார் மற்றும் திருமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள்  தொடர்கின்றன.