(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் முறையாக உரியவர்களைச் சென்றடையவில்லை என்று குற்றஞ்சுமத்திய மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்னண்,  இந்த கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டங்களில் கிராம சேவகர்கள் உள்ளிட்ட  அரச அதிகாரிகளுக்கு அரசாங்கத்தின் அபிமானிகளால் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும், உப குடும்ப அங்கத்தவர்களுக்கும், கொழும்பில் வாடகை வீடுகளில் தங்கியிருப்பவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்று பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி செயலணிக்கு அறிவித்துள்ளதாகவும் இராதா கிருஷ்னண் மேலும் தெரிவித்தார்.

5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் நிறைவடைந்து இரண்டாம் கட்டம் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. எனினும் முதலாம் கட்டத்தில் கொடுப்பனவைப் பெறத் தகுதியானவர்களுக்கு குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பலருக்கும் அந்த கொடுப்பனவு வழங்கப்படவில்லை. இது தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுமா என்று வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வைரஸ் பரவல் காரணமாக மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அவர்களுக்கு உதவும் முகமாகவே அரசாங்கத்தால் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் அரசாங்கத்தின் அபிமானிகள் உள்ளிட்ட சிலரால் இந்த வேலைத்திட்டம்  அரசியல்  மயமாக்கப்பட்டது. இதனால் கொடுப்பனவைப் பெற தகுதியுடைய பலருக்கும் கொடுப்பனவு கிடைக்காமல் போயுள்ளது.

கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்தில் கிராம சேவகர்கள் மீது தனித்து குற்றம் சுமத்த முடியாது. காரணம் அரசியல் ரீதியாக உயர் மட்டத்திலிருந்து அவர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது. அதன் காரணமாக அரசியல் ரீதியாக இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. இந்த செயற்பாடு தொடரக் கூடாது என்பதை விசேட ஜனாதிபதி செயலணியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

எனவே அடுத்த வாரமளவில் இரண்டாம் கட்டமாக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதன் போதாவது அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என்று அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம் என்றார்.