தேசிய விருது பெற்ற நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா நடித்திருக்கும் ‘தண்ணி வண்டி’படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.

தமிழ் திரை உலகில் சிறந்த குணசித்திர நடிகரும், இயக்குனருமான தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா. இவர் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கதாநாயகனாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ‘மணியார் குடும்பம்’ மற்றும் சேரனின் ‘திருமணம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவர் அடுத்ததாக நடித்திருக்கும் திரைப்படம் ‘தண்ணி வண்டி’. அறிமுக இயக்குனர் மாணிக்க வித்யா இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் உமாபதி ராமையாவிற்கு ஜோடியாக ‘வில் அம்பு’ படப்புகழ் நடிகை சம்ஸ்கிருதி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் பாலசரவணன், தேவதர்ஷினி, வித்யூலேகா, சேரன் ராஜ், மனோஜ்குமார், ஜோர்ஜ், பாவா லட்சுமணன், ‘காதல்’ சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,“ தண்ணீர் பிரச்சனைக்கும், படத்தின் தலைப்பிற்கும் எந்த தொடர்புமில்லை. நாயகன் மதுரையில் குடிநீரை வினியோகம் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்.

அவர் மது அருந்தும்பழக்கமுடையவரும் கூட. எனவே கதைக்கு பொருந்தும் வகையில் இருப்பதால் இந்த தலைப்பினை சூட்டியிருக்கிறோம். கதாநாயகனுக்கும், அவர் வசிக்கும் பகுதியில் புதிதாக நியமிக்கப்பட்ட அரசு உயரதிகாரி ஒருவருக்கும் இடையிலான மோதலை அடிப்படையாக கொண்ட திரைக்கதை.” என்றார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது. இந்த திரைப்படம் பட மாளிகையில் வெளியாகாமல் நேரடியாக டிஜிற்றல் தளத்தில் வெளியாகும் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.