பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி முன்னணியிலுள்ள இயக்குனர் ஹரி, அவர் இயக்கவிருக்கும் ‘அருவா’ படத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தில் 25 சதவீதத்தை குறைத்து கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறார்.

கொரோனாத் தொற்று பரவாதிருக்க இந்தியா முழுவதும் பட மாளிகைகள் மற்றும் திரைப்படத் தொழில்கள் ஆகியவை முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்கள்,‘ நட்சத்திரங்களும், முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களின் ஊதியத்தில் 25 சதவீதத்தை குறைத்து கொள்ள வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்டு முன்னணி நடிகரான விஜய் அண்டனி தற்போது நடித்து வரும் மூன்று படங்களிலும் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்திலிருந்து இருபத்தைந்து சதவீதம் குறைத்துக் கொள்வதாக அறிவித்தார். அவரது அறிவிப்பிற்கு திரையுலகில் பெரும் வரவேற்புகிடைத்தது.

இதனைத் தொடர்ந்து வளரும் நடிகரான ஹரிஷ் கல்யாணும் சம்பள குறைப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஹரி, சூர்யா நடிப்பில் தயாராகவிருக்கும் ‘அருவா’ படத்திற்காக தனக்குப் பேசப்பட்ட சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்துக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார். இவரின் அறிவிப்பிற்கு திரையுலகினர் பலரும் ஆதரவும், வரவேற்பும் தெரிவித்திருக்கிறார்கள்.

‘அருவா’ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை ராசி கண்ணா நடிக்கிறார் என்பதும், இப்படத்தின் பணிகள் லொக்டவுனுக்குப் பிறகு அதிகாரபூர்வமாக தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.