இலங்கை விமானப் படையின் விமானங்களை பழுதுபார்ப்பதற்கு ஆறு உக்ரேனிய விமான பொறியாளர்கள் இன்று காலை நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

உக்ரேன் தலைநகர் கியேவிலிருந்து புறப்பட்ட 6 உக்ரேனிய விமானப் பொறியியலாளர்களைக் கொண்ட குழுவானது இன்று அதிகாலை 4.10 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இலங்கை விமானப்படையின் அன்டனோவ் 32 ரக 3 விமானங்களின் ஆயுட்காலம் நிறைவடைந்துள்ள நிலையிலேயே குறித்த விமானங்களை வடிவமைத்த நிறுவனத்தைச் சேர்ந்த குழுவினரே இவ்வாறு இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் குறூப் கப்டன் துஷன் விஜேசிங்க தெரிவித்தார்.

இவர்கள் உக்ரேனில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு, மருத்துவ சான்றிதழ்களையும் பெற்ற பின்னரே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இருந்தபோதும் அவர்களை நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தங்களது தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததைத் தொடர்ந்து, அவர்கள் விமானப்படை விமானங்களை ஆய்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.