(செ.தேன்மொழி)

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் நிவாரணப்பணம் சமூர்த்தி நிதியத்திலிருந்து வழங்கப்பட்டு வருவதாக சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.

இதேவேளை கொவிட் -19 வைரஸ் பரவலின் மத்தியிலும் வர்க்க பேதம் மற்றும் இனபேதத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும், வைரஸை விட இனவாதம் பெரும் ஆபத்தானது என்றும் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொவிட் - 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் 5000 ரூபாவை நிவாரணப் பணமாக வழங்கி வருகின்றது. இந்த நிவாரணப்பணம் சமூர்த்தி நிதியிலிருந்தே வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் இந்த  நிவாரணப்பணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது. இது உண்மையெனில் வைரஸ் பரவல் தொடர்பில் நாட்டுக்கு கிடைக்கப் பெற்ற ஏனைய நிதிகளுக்கு என்ன நடந்தது. இதேவேளை அரசாங்கம் அரச ஊழியர்களின் ஊதியத்தை வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பயன்படுத்துவதற்காக அர்ப்பணிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. அரச ஊழியர்களுக்கு கிடைக்கப் பெறும் சம்பளம் அவர்களது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு கூட போதுமானதாக இல்லாத நிலையில் எவ்வாறு அவர்கள் அதனை தியாகம் செய்யமுடியும்.

அரச ஊழியர்கள் தங்களது ஊதியத்தை தியாகம் செய்தாலும், இதற்கு சுனாமி நிதிக்கு ஏற்பட்ட   நிலைமையே ஏற்படும். ஏன் என்றால் சுனாமி அனர்த்தத்தின் போது ஆட்சியில் இருந்தவர்களே தற்போதும் ஆட்சியில் இருக்கின்றனர். இதேவேளை கடன் மூலம் நாட்டை ஆட்சி செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது. பாராளுமன்றம் கலைக்கப்படும் போது 721 மில்லியன் கடனே அரசாங்கம் பெறுவதற்கு அனுமதியிருந்தது. ஆனால் தற்போது கடன் தொகை அதிகரித்துள்ளது. அப்படியென்றால் யாருடைய அனுமதியுடன் இந்த கடனை பெற்றார்கள். 220 பில்லியன் ரூபாய் பணம் அச்சிட்டுள்ளதாக மத்தியவங்கி தெரிவித்துள்ளது. போதிய பொருளாதார வளர்ச்சியின்றி பணம் அச்சிடுவது எதிர்காலத்தில் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்.

அரசாங்கம் எதேச்ச அதிகாரத்தை பயன்படுத்தி செயற்பட முயற்சிக்கின்றமையினால், வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறும்  உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பும் இல்லாமல் போகும். நடைமுறை அரசாங்கம் ஆட்சியமைத்து இதுவரையான காலப்பகுதியில் பெண் ஊடகவியலாளர்கள் இருவர் உள்ளிட்ட 17  ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொவிட் - 19 வைரஸ் பரவல் தொடர்பில் போலிச் செய்திகளை பரப்பியதாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களே வைரஸ் தொடர்பில் உண்மை செய்திகளை வெளியிட்டவர்கள். எமது ஆட்சிகாலத்தில்  ஊடகவியலாளர்களுக்கு  நாங்கள் பெற்றுக் கொடுத்த சுதந்திரம் தற்போது பாதிப்படைந்துள்ளது.

இதற்கிடையில் இனவாதம் மற்றும் வர்க்க பேதத்தை அரசாங்கம் வெளிப்படுத்தி வருகின்றது. இனவாதத்தின் மூலம் தேர்தலை வெற்றிக் கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. வைரஸ் பரவலை விட இனபேதம் பெரும் இழப்புகளை ஏற்படுத்தும். இந்நிலையில் இனவாதம் என்பது பெரும் அபாயகரமானது என்பதை உணர்ந்து அரசாங்கம் செயற்பட வேண்டும்.