தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் தலைவர் சிறி சபாரட்ணத்தின் 34 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் உரும்பிராய் மேற்கு அன்னங்கை தோட்ட வெளியில் இன்று (06.05.2020) மாலை 4.45 மணிக்கு கட்சியினரால் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரொலோ) யாழ் மாவட்ட பொறுப்பாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் குருசுவாமி சுரேன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம், சபா குகதாஸ், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன், நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளர் ஜெயகரன், உள்ளராட்சி மன்றங்களின் உறுப்பினர், கட்சியின் தொண்டர்கள் என மட்டுப்படுத்தப்பட்ட தொகையினர் அஞ்சலி செலுத்தினர்.

விடுதலைப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்ணம் உள்ளிட்ட போராளிகளை நினைவு கூர்ந்து மௌனப் பிரார்த்தனை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கட்சியின் முக்கியஸ்தர்களால் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து மலரஞ்சலிகள் இடம்பெற்றன.

சுகாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வழமையில் தமிழீழ விடுதலை இயக்கத்தினரால் (ரெலோ) அஞ்சலிக்கூட்டம் சிறப்பாக வருடாவருடம் அனுஸ்டிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.