(எம்.மனோசித்ரா)

நாடு நெருக்கடியான நிலையை எதிர்க்கொண்டிருக்கையில் சுய அரசியல் நோக்குடன் செயற்படுவது அநாகரீகமானதாகும். ஆளும் கட்சியாக பதவியிலிருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க அங்கு மேலும் கூறுகையில்,

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டங்கள் காணப்படும் குறைபாடுகளை தெரியப்படுத்த வேண்டியது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கட்டாய கடமையாகும்.எதிர்க்கட்சியாக இருக்கும் போது எடுத்துக்காட்டாக செயற்படுவதன் மூலம் ஆட்சி அதிகாரம் கிடைக்கப் பெற்ற பின்னர் செயற்படும் விதம் பற்றி மக்களுக்கு புரிதலை ஏற்படுத்துவதாகவே அமையும்.

கொவிட்-19 தொற்றினால்  நாடு பாரியதொரு அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ளது. ஏனைய உலக நாடுகளும் இன்று முழுமையாக செயழிலந்து நாட்டு மக்களின் நலன் மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவதில் கூடிய கவனம் செலுத்தி செயற்படுகின்றன.

இதே நிலையில் தான் நாமும் எமது மக்களின் நலன் குறித்து கூடிய கவனம் எடுக்க வேண்டும். அரசாங்கம் பொறுப்பற்று செயற்படும் பட்சத்தில் அதனை கடுமையாக விமர்சிக்க வேண்டும். மறுப்புறம் நல்ல விடயங்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். எனவே தற்போதைய நிலைமையில் நாம் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.