மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை வெளியேற்றினால் மட்டுமே தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நாட்டின் மீதான நம்பிக்கை உறுதிசெய்யப்படுமென தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்விடயத்தில் பிரதமரின் நண்பரா? இல்லையா? என்பதனைவிட  நாட்டுக்கு நன்மையா? தீமையா? என்பதுதான் முக்கியம் என்றும்  குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரும் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்திருப்பதாவது,

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் பிரதமரின் நண்பரா? இல்லையா? என்ற விடயம் முக்கியமானதல்ல. அவரால் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையா? இல்லையா? என்பது தான் முக்கியமானதாகும்.

இதன் அடிப்படையிலேயே தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். நாட்டு மக்களின் நிதி சரியான முறையில் கையாளப்பட வேண்டியது முக்கியமானதாகும். உயர்நீதிமன்றம் இவ்விடயத்தில் வெளியிட்ட தீர்ப்பை நாம் விமர்சிக்கவில்லை. ஆனால்  "கோப்"குழுவின் முன்னிலையில் இவர் விசாரிக்கப்பட்ட போது தனது மருமகனின் நிறுவனத்திற்கு பங்குகளை வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

கோப் குழுவில் சுட்டிக்காட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களை அவர் மறுக்கவில்லை. இதனடிப்படையிலேயே அவர் மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்ற வாதத்தை முன்வைக்கின்றோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் குற்றச்சாட்டுக்கள் இருப்பவர் மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருக்கக்கூடாது வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்.

இவ்வாறு பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கு உள்ளான மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தொடர்ந்தும் அப்பதவியை வகிப்பது நியாயமற்றது. அவரை அப்பதவியிலிருந்து வெளியேற்றுவதன் மூலமே தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நம்பிக்கையை உறுதி செய்து கொள்ள முடியும் என்றார்.