கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஸ்பெய்ன் கால்பந்தாட்ட லீக்கான ‘லா லிகா’ எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெய்ன் அரசாங்கம் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்துள்ளன. இதனால் எதிர்வரும் 11 ஆம்  திகதியிலிருந்து ‘டொப்-2’ பிரிவு போட்டிகளில் விளையாடிவரும் கால்பந்தாட்ட அணிகள் தத்தமது பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளன.அதற்கு முன்னதாக ஸ்பெய்ன் நாட்டின் சுகாதாரத்துறை சார்பில் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது. இதன்படி அந்நாட்டின் முதற்தர கழகங்களான பார்ஸிலோனா, ரியல் மெட்ரிட் உள்ளிட்ட முன்னணி கழக வீரர்களுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

முதலில் வீரர்கள் தனித்தனியாக பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். அதன்பிறகு சில வாரங்களுக்குப் பின்னர் அணியாக கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். எதிர்வரும் ஜூன் மாதத்தில் ‘லா லிகா’ போட்டியை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.