கொரோனா வைரஸ் - கொவிட் 19 என்பது உலகப் பேரிடர். ஏனைய நாடுகளைப் போலவே இலங்கைக்கு அது தேசியப் பேரிடர். மனிதர்களில் தொற்றிப் பரவி, உயிர்களைப் பலி கொள்வதே அதன் ஒரே இலக்கு. கடந்த பத்து தினங்களுக்குள் உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர்வரையிலான பொதுமக்களின் உயிர்களைக் குடித்து ஏப்பம் விட்டிருக்கின்றது.

உலக நாடுகள் பலவற்றிலும் 35 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் தொற்றிப்பரவி இன்னும் முன்னேறிக்கொண்டிருக்கின்றது. இந்தக் கொடிய வைரஸினால் 2 லட்சத்து 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றார்கள். அதேவேளை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களைவிட 21 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவர்களும் பணியாளர்களும் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் சிகிச்சையளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

உலக மாந்தருக்கு இது ஒரு மோசமான நிலைமை. மனித குலத்துக்கு எற்பட்டிருக்கின்ற மாபெரும் கேடு. ஆனாலும், கொரோனா வைரஸின் தீவிரமான தொற்றுப் பரலவுக்கு மத்தியிலும் பெரும் எண்ணிக்கையிலான உயிரிழப்புகளுக்கிடையிலும் 11 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணத்தின் விளிம்பு வரையில் சென்று உயிருடன் மீண்டிருக்கின்றார்கள். கொரோனவின் உயிர்ப்பலி கொள்கின்ற வீரியமான வெறித்தன்மை ஏற்படுத்தியுள்ள அச்ச நிலையிலும் இது ஆறுதல் தருகின்ற ஒரு விடயம் என்பதை மறந்துவிடக் கூடாது.

உலகத்தைப் பற்றிப்பிடித்து பேரவலத்தை ஏற்படுத்திய முன்னைய வைரஸுகளிலும் பார்க்க கொரோனா வைரஸ் கொடுமையானது. இரக்கமற்றது. கட்டுப்படுத்த முடியாதது. அதனை எதிர்ப்பதற்கும் அந்த நோய்த்தொற்றைத் தடுப்பதற்கும் உரிய வழியறியப்படவில்லை. சில மருத்துவ விஞ்ஞாணிகள் அந்த முயற்சியில் வெற்றி இலக்கை எட்டியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆனாலும் கொரோனா வைரஸைத் தடுத்து நிறுத்துவதற்குரிய நிலைமைகள் உருவாகிவிட்டது என்று அரசுகளும் உலக மக்களும் இன்னும் மன ஆறுதலடைகிள்ற நிலைமை உருவாகவில்லை. இதனால் கொரோனா வைரஸ் பற்றிய உயிரச்சமும், நோய்த் தொற்று பற்றிய பீதியும் மக்கள் மத்தியில் குறையவில்லை. அவர்களுடைய மனங்களில் அடுத்த கட்ட வாழ்க்கை நிலைமை குறித்தும், அடுத்த கட்;ட உலக நிலைமை குறித்ததுமான கவலை மண்டிக்கிடக்கின்றது.

அரசியல் ஆதிக்கமும், அதிகாரப் பேராசையும்

கொரோனா வைரஸிடமிருந்து தப்பிக் கொள்வதற்கும், அதனை முன்கூட்டியே தடுப்பதற்கும் மருந்துகள் வழியாக மார்க்கம் எதுவும் இல்லாத போதிலும், அதன் தொற்றுப் பரவலில் இருந்து தப்பியிருப்பதற்கான வழிமுறைகள், வாழ்க்கை முறைகள் பற்றிய போதிய தெளிவு மக்கள் மத்தியில் வேகமாகப் பரவியிருக்கின்றது. இந்த நிலைமை இலங்கைக்கும் பொருந்தும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் குறித்த அதீத அச்சத்திற்கும் பீதிக்கும் ஆளாகாமல், அந்த நோய்த் தொற்றைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை வழிமுறைகளைக் கவனமாகவும் தீவிரமாகவும் கடைப்பிடித்து ஒழுக வேண்டியது அவசியம். தீவிரமான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நடந்து கொள்வது மட்டுமல்லாமல் மனத்துணிவுடனும் மக்கள் செயற்பட வேண்டியதும் மிக மிக அவசியம். துணிவின்றேல் கொரோனாவின் அச்சம் பீதி காரணமாக அந்த நோயிலும் பார்க்க பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்த வல்ல உளவியல் பாதிப்புகளுக்கும் அதன் ஊடாக ஏனைய நோய் நிலைமைகளுக்கும் ஆளாக நேரிடும் என்பதை மனங் கொள்ள வேண்டியது முக்கியம்.

கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. உடற் சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட கொரோனா அந்த எல்லையைக் கடந்து மருத்துவம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், அரசியல், பொருளாதாரம், சமூகம், கலை, கலாசாரம் என்று மனித வாழ்க்கையின் அநேகமாக அனைத்து அம்சங்களிலும் தாக்கம் செலுத்தி மனித குலத்தைத் தடுமாறச் செய்துள்ளது.

இத்தகைய மோசமான கொரோனாவின் தாக்கத்துக்கு எதிராக மனிதாபிமானத்துடனும் மனித நேயத்துடனும் அனைவரும் செயற்பட வேண்டும். மக்களை முதன்மைப்படுத்தி, தேசிய நலன்களை இலக்காகக் கொண்டு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.

ஆனால் உலக நாடுகள் குறிப்பாக வளர்ச்சிபெற்றுள்ள நாடுகளும் வல்லரசுகளும் தனித்தனியே தமது அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. சீனா, அமெரிக்கா உள்ளிட்ட முன்னணி நாடுகளிடம் இதனைக் காண முடிகின்றது.

மனிதர்களைக் கொன்று குவிக்கின்ற கொரோனாவைக் கொன்றொழிப்பதற்காக உலக நாடுகள் ஒன்றிணைந்து செயற்படுவதைக் காண முடியவில்லை. ஒன்றிணைவதற்கு அந்த நாடுகளினால் முடியாதுள்ளது. இதே நிலைதான் இலங்கையில் அரசியல் கட்சிகளிடத்திலும், அரச தரப்பிடத்திலும் நிலவுகின்றது.

தேசத்தை அச்சுறுத்தி, அனைத்துச் செயற்பாடுகளையும் முடக்கிப் போட்டிருக்கின்ற கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணத்தில் அரசியல் ரீதியாகப் பலரும் பிரிந்திருக்கின்றார்கள். தேச நலனிலும் பார்க்க சுயலாப அரசியலில் அவர்கள் ஆழ்ந்து கிடக்கின்றார்கள். அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்ற பேராசை அவர்களைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கின்றது.

பரஸ்பர அவநம்பிக்கை

தேசிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் நெருக்கடி நிலையில் அரச தரப்பும், எதிர்க்கட்சிகளும் ஏறுக்குமாறாகச் செயற்படுவதிலும் நடந்து கொள்வதிலுமே தீவிர கவனம் செலுத்தி இருக்கின்றன. நாட்டில் தேர்தலே இப்போது முதன்மை பெற்றிருக்கின்றது. அதுவே பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அரச தரப்புக் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் அரசியல் களத்தில் எதிரணிகளாக இருக்கின்றன. அந்த அரசியல் உளவியலில் முழுமையாக ஆழ்ந்துள்ள அவை பரஸ்பரம் நம்பிக்கை இழந்திருக்கின்றன.

ஒரு தரப்பு மற்றைய தரப்பை எந்தக் காரணத்தைக் கொண்டும் நம்புவதற்கு தயாராக இல்லை. என்றாலும், இது விடயத்தில் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் தலைமையிலான பொதுஜன பெரமுனவும், அதன் நேசக்கட்சிகளும் எதிர்க்கட்சிகளை இம்மியளவும் நம்வுதற்குத் தயாரில்லை என்ற போக்கையே வெளிப்படுத்தி இருக்கின்றன.

கொரோன வைரஸ் ஏற்படுத்தியுள்ள நெருக்கடி நிலையிலும் அரச தரப்பினர் அரசியல் வயப்பட்ட மன நிலையில் இருந்து வெளியில் வரத்தயாரில்லை. ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்கும், அதனைச் சார்ந்திருந்த அரசியல் கட்சிகளுக்கும் சிங்கள பௌத்த மக்களிடம் இருந்த கிடைத்த ஆதரவு நிலைமையை மேலும் அதிகரித்துக் கொள்வதிலேயே தீவிர கவனம் செலுத்தப்படுகின்றது.

அரச தரப்பின் இந்த அரசியல் போக்கை விரும்பாத எதிரணியினரும், தங்களுடைய அரசியல் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கான வழிவகைகளில் பயணிக்கவே முயற்சிக்கின்றார்கள். ஆளுந் தரப்பினரின் சுயலாப அரசியல் போக்கு இதற்கு உந்து சக்தியாக அமைந்திருக்கின்றது.

கொரோனாவினால் ஏற்பட்டுள்ள மிக மோசமான தேசிய நெருக்கடி நிலையில் அரச தரப்பினரும், எதிரணியினரும் பரஸ்பரம் நம்பிக்கை கொள்ள முடியாதவர்களாக இருப்பது நாட்டு மக்களுக்குப் பெரும் கேடு விளைவிக்கத்தக்க நிலைமையை உருவாக்கி இருக்கின்றது.  

கொரோனா வைரஸுக்கு அஞ்சி, அடங்கி ஒடுங்கியுள்ள மக்களின் செயலற்ற நிலைமையை அரசியல்வாதிகள் குறிப்பாக அரச தரப்பைச் சேர்ந்தவர்கள் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கே முயன்றிருக்கின்றார்கள்.

இதனால் தான் அரசியல் பேதங்களைக் கைவிட்டு, அராசங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்குத் தயார் என தெரிவித்து எதிரணியினர் முன்வைத்த யோசனையை அரசாங்கம் ஏறெடுத்தும் பாராத நிலையில் முற்றாகப் புறக்கணித்திருக்கின்றது.

எதிரணியினரின் நகர்வையும், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டி, ஒன்றிணைந்து செயற்படுவோம் என்ற முன்னகர்வையும் அரசியல் கபட நோக்கம் கொண்டது என்று ஜனாதிபதியும் பிரதமரும் சித்தரித்து நிராகரித்திருக்கின்றனர்.

அரசியல் நோக்கமே பிரதானம்

அரச தரப்பினருக்கும் எதிரணியினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கை முழுக்க முழுக்க அரசியல் ரீதியானது. தேசிய நெருக்கடிச் சூழ்நிலையில் அரசியலைக் கைவிட்டு அல்லது அரசியலுக்கு அப்பால் பொதுநன்மையைக் கருத்திற்கொண்டு அவர்கள் செயற்பட்டிருக்க வேண்டும். அரசியல் என்பதும், ஆட்சி அதிகாரம் என்பதும் வெறுமனே அரசியல் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது. தேசிய நலனையும் நாட்டு மக்களின் நலன்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். அத்தகைய தன்மைகளைக் கொண்டவர்களே உண்மையான மக்கள் பிரதிநிதிகளாகவும், அரசியல் தலைவர்களாகவும் மதிக்கப்படுவார்கள்.

அரச தரப்பினர் எதிரணியினரைத் தூக்கியெறிந்து நடந்து கொள்வதற்கு அரசாங்கத்தில் அவர்கள் சிறுபான்மையாக இருப்பதே முக்கிய காரணம். நல்லாட்சி அரசாங்கத்தின் நாடாளுமன்றத்தையும் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதியையும் கொண்டுள்ள இந்த அரசாங்கத்தில் எதிரணியினரே பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருக்கின்றனர்.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டினால் நம்பி;க்கை இல்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து எதிரணியினர் தங்களைத் தோற்கடித்துவிடுவார்கள். பொதுத் தேர்தல் ஒன்றை எதிர் நோக்கியுள்ள தருணத்தில் அத்தகைய அரசியல் தோல்வி அவர்கள் எதிர்பார்த்திருக்கின்ற தேர்தல் வெற்றியைப் பாதிக்கும். தேர்தலில் மோசமான பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்பது அவ்களுடைய அரசியல் ரீதியான அச்சம்.

அதேவேளை, கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் தங்களுக்குள்ள அரசியல் ரீதியான பெரும்பான்மை பலத்தின் காரணமாகவே மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை எதிரணியினர் துணிச்சலோடு முன்வைத்துள்ளார்கள். வரப்போகின்ற தேர்தலில் தங்களுக்கு சாதகமான நிலைமையை உருவாக்கிக் கொள்வதற்குக் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டி கொரோனா நெருக்கடி நிலையில் தங்களுடைய பங்களிப்பையும் அரசியல் ரீதியாகப் பதிவு செய்யவே அவர்களும் விரும்புகின்றார்கள்.

இத்தகைய அரசியல் நோக்கம் எதுவும் தங்களிடம் இல்லை. உண்மையிலேயே மக்களுடைய நலனைக் கருத்திற்கொண்டே தாங்கள் மிகுந்த விட்டுக் கொடுப்புடன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முயற்சிப்பதாக அவர்கள் கூறலாம். அதனை மறுப்பதற்கில்லை. விமர்சிக்கவும் முடியாது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் பாதிப்புமிக்க நெருக்கடியான சூழலில், பொதுத் தேர்தல் ஒன்றை நாடு எதிர்நோக்கியுள்ள தருணத்தில் தங்களுடைய நடவடிக்கையில் அரசியல் ரீதியான நோக்கம் இல்லை என்று கூற முடியாது.

சட்டரீதியற்ற சட்டமா.....?

ஆனால் எதிரணியினரிலும் பார்க்க ஜனாதிபதி கோத்தாபாய தலைமையிலான அரசாங்கத் தரப்பினருடைய நடவடிக்கைகள் மிகத் தீவிரமான அரசியல் உள்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இந்த உள்நோக்கங்கள் மிகவும் சாமர்த்தியமான முறையில் மறைக்கப்பட்டிருக்கின்றன. அல்லது மிக நேர்த்தியான முறையில் கையாளப்படுகின்றன என்பதையும் மறுக்க முடியாது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதும் அப்போது எழுந்திருந்த ராஜபக்சக்களுக்கு ஆதரவான அரசியல் அலையை அடுத்த கட்;டமாகிய பொதுத் தேர்தல் வரையிலும் உயிர்ப்புடன் பேணிக்கொள்ள வேண்டும் என்பதில் அவர்கள் மிகத் தெளிவாக இருந்தனர். தீவிரமாகவும் செயற்பட்டனர்.

இந்தத் தெளிவும் தீவிரமும் வெறுமனே அரசியல் ரீதியான பேராவலாக உணர்ச்சிகரமானதாக அமைந்திருக்கவில்லை. அவற்றை அவர்கள் மிகச் சாதுரியமான திட்டங்களின் ஊடாகச் செயற்படுத்துவதில் மிகவும் கவனமாகச் செயற்பட்டிருந்தார்கள். செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றே கூற வேண்டும்.

கொரோனா வைரஸ் என்பது எதிர்பார்த்தே இருக்காத ஒரு பேரிடர். இலங்கை போன்ற நிறிய நாட்டில் அதன் தாக்கம் என்பது மிக மிக மோசமானது. அதனை எதிர்கொள்வதற்கு நிறைவேற்று அதிகாரம் என்ற செயல் வல்லமை ஜனாதிபதி கோத்தாபாயவுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் பேருதவியாக அமைந்தது.

அதேவேளை, இரு கட்சி கொண்ட அரசாங்கமாக (– நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டது ஐக்கிய தேசிய கட்சியின் அணி, அங்கு எதிர்க்கட்சியாக இருந்த பொதுஜன பெரமுன நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதி பதவியைக் கொண்டிருந்தது) இருந்த போதிலும், இராணுவ பலத்தை ஆதாரமாகக் கொண்டு நிறைவேற்று அதிகாரத்தின் அம்சங்களை அச்சொட்டாகப் பயன்படுத்தி ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்ச அரச தரப்பினருக்கான அனுகூலங்களை அதிகரித்துக் கொண்டிருக்கின்றார்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தேசிய முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பொது ஒழுங்கையும் சட்டத்தையும் பேணுவதற்கு உதவியாக இராணுவம் பயன்படுத்தப்பட்டது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகியவர்களின் வழித்தடங்களைப் பின்தொடர்ந்து வைரஸ் பரவலுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பதற்காக இராணுவ புலனாய்வு பிரிவினர் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் செயற்படுத்தப்பட்டார்கள்.

இவ்வளவு நடைபெற்ற போதிலும், நாட்டில் நெருக்கடி நிலைமை உருவாகியிருக்கின்றது என்பதை அதிகாரபூர்வமாக ஜனாதிபதி கோத்தாபாய அறிவிக்கவில்லை. அவசர நிலையொன்று ஏற்பட்டிருப்பதாகப் பிரகடனம் செய்யவில்லை. ஆனால் அவசர நிலையொன்று ஏற்பட்டிருப்பதற்கு ஏற்ற வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டார்கள். ஊரடங்கை மீறியவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இது வரையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் வடக்கில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டவர்களில் பலருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பொலிசார் வழக்குத் தாக்கல் செய்து அவர்களுக்கு தலா 600 ரூபா வரையில் தண்டம் விதிக்கப்பட்டது.

தந்திரோபாயச் செயற்பாடுகள்

அவசரகால நிலை இல்லாமலே ஊரடங்கு உத்தரவு நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனை மீறியவர்களுக்கு எதிராக சட்டம் பாய்ந்தது. இது, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் நிலவிய நிலைமை.

இவ்வாறிருந்தும் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியிருந்தபோதே நாட்டில் நெருக்கடி நிலைமை கிடையாது. அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்மானமாகத் தெரிவித்திருந்தார்.

உண்மையிலேயே அவசரகால நிலைமையை அவர் பிரகடனம் செய்து உடனடியாக அதனை நடைமுறைப்படுத்தி நிலைமைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தாலும், அவசரகால நிலைமையைத் தொடர்வதற்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டிய கட்டாய நிலைமை உருவாகி இருக்கும்.

எனவேதான் அவசரகால நிலைமையை அவர் பிரகடனப்படுத்தவில்லை. அது மட்டுமல்லாமல் அவசரமான நிலைமைகளின்போது, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 16 ஆம் பிரிவின் கீழ் ஊரடங்கு சட்டத்தைப் பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அரசியலமைப்பிலும்கூட ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் எதுவுமில்லை.

ஆனால் 1987 ஆம் ஆண்டின் தொற்றொதுக்குச் சட்டத்தின் கீழ் நோய்த்தொற்று நிலைமைகளின் அடிப்படையில் சுகாதார நடவடிக்கைகளுக்காக பொலிஸ் ஊரடங்கைப் பிறப்பிப்பதற்கு அதிகாரம் இருந்த போதிலும், அது சட்ட வழிமுறைகளின் ஊடாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதை சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அவசியமான ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பிப்பதற்கு அதிகாரம் பெற்றுள்ள ஜனாதிபதி நேரடியாக அதனைச் செய்யவில்லை. அல்லது வேறு ஒருவருக்கு அந்த அதிகாரத்தைக் கையளிக்க முடியும் என்ற சட்ட விதியைக்கூட அவர்ப யன்படுத்தவில்லை. ஆனால் நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதுபோன்ற இன்னும் வேறு சில விடயங்களிலும் அரசியல் ரீதியான நுணுக்கமான தந்திரோபாயச் செயற்பாடுகளை முன்னெடுத்து ஆளுந் தரப்பாகிய பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர்களாகிய ராஜபக்சக்கள் எதிரணியினரை அரசியல் வழியில் எதிர்கொண்டு அவர்களைச் செல்லாக்காசு நிலைமைக்கு ஆளாக்கியிருக்கின்றனர். அதன் ஊடாக மக்கள் மத்தியில் அவர்களுடைய அரசியல் செல்வாக்கைச் சரிப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கின்றார்கள்.

பி.மாணிக்கவாசகம்