ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் 32 ஆவது கூட்டத் தொடரில் நாளை மறுதினம் உரையாற்றவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று ஜெனிவா பயணமாகிறார்.
நாளை மறுதினம் புதன்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் குறுகியநேர உரையொன்றை ஆற்றவுள்ள அமைச்சர் மங்கள சமரவீர இதன்போது உள்ளக விசாரணைப் பொறிமுறை விசாரணையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார். நேரம் குறுகியதாக இருப்பினரும் அமைச்சர் நீண்ட உரையுடன் கூடிய ஆவணத்தை ஜெனிவாவில் தாக்கல் செய்வார்.

அத்துடன் புதிய அரசாங்கம் நல்லிணக்க செயற்பாடுகளில் மேற்கொண்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பிலும் அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச சமூகத்திற்கு தனது உரையில் விளக்கம் அளிக்கவுள்ளார்.
இது இவ்வாறு இருக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையளார் செயிட் அல் ஹூசைனையும் அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் சந்தித்து இலங்கையின் நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார்.
கடந்தவாரம் ஒஸ்லோவில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைனை சந்தித்திருந்த அமைச்சர் மங்கள சமரவீர இலங்கையின் நிலைமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடியிருந்தார்.
அந்தவகையிலேயே மீண்டும் நாளை அல்லது நாளை மறுதினம் ஜெனிவாவில் செயிட் அல் ஹூசைனை அமைச்சர் மங்கள சமரவீர சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமைச்சர் மங்கள சமரவீர உள்ளகப் விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை ஈடுபடுத்தும் கோரிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிப்பார் எனக்கூறப்படுகின்றது.
ஆனால் சர்வதேச நீதிபதிகள் விவகாரம் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுக்கப்படுமென அமைச்சர் மங்கள சமரவீர கடந்தவாரம் ஒஸ்லோவில் கூறியிருந்தார்.
கடந்த செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தது.
அந்தப் பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்தது. அந்த வகையில் குறித்த பிரேரணையின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த தயார் என அரசாங்கம் கூறிவருகிறது.