போகோ ஹராம் மற்றும் ஐஎஸ்வெப் 'ISWAP' என்ற மேற்கு ஆபிரிக்க மாகாணத்தின் இஸ்லாமிய ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 134 உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக நைஜீரியா அரசு தெரிவித்துள்ளது.

நைஜீரியாவின் வட கிழக்கு பகுதியில் குறித்த ஆயுதக் குழுவினருக்கு எதிராக மே முதலாம் திகதி முதல் நைஜீரிய அரச படையினரால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலின் காரணமாகவே இந்த உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ஜோன் எனென்ச் தெரிவித்துள்ளார்.

ஐஎஸ்வெப் (ISWAP ) என்பது போகோ ஹராமின் பிளவுபட்ட குழுவாகும். சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் 78 பேர் ஐஎஸ்வெப் (ISWAP ) அமைப்பின் உறுப்பினர்கள் என்றும் 56 பேர் போகோ ஹராம் உறுப்பினர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் நைஜீரிய படையினர் ஆயுதக் குழுக்களின் 16 உறுப்பினர்களை கைதுசெய்தும் உள்ளனர். இந்த நடவடிக்கையின் போது ஏராளமான வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

போகோஹராம் தனது போராட்டத்தை 2009 இல் வடகிழக்கு நைஜீரியாவில் ஆரம்பித்தது. ஆனால் பின்னர் அது அண்டை நாடான நைஜர், சாட் மற்றும் கமரூன் வரை பரவியது.

நைஜீரியாவில் போகோ ஹராமின் ஒரு தசாப்த நடவடிக்கைகளில் 30,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், சுமார் மூன்று மில்லியன் பேர் இடம்பெயர்ந்தும் உள்ளதாக மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது.