20 ஆண்டுகளின் பின் சூடான், அமெரிக்காவுக்கான தனது முதல் தூதுவரை நியமித்துள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

பொது மக்களின் ஆட்சிக் கவிழ்ப்பிற்கான வெகுஜன ஆர்ப்பாட்டங்களையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இராணுவத்தினால் ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்ட சூடானின் நீண்டகால ஜனாதிபதியான ஒமர் அல் பஷீரின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்டோக் வொஷிங்டனுக்கு விஜயம் செய்தபோது, இரு நாடுகளுக்கிடையிலான தூதர்களின் நியமனம் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தார்.

இந் நிலையிலேயே தற்போது ‍அமெரிக்காவுக்கன சூடானின் தூதுவராக நியூரெல்டின் சத்தி ( Noureldin Sati ) நியமிக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்க அதிகாரிகள் அவரது நியனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1990 களில் பிரான்சிற்கான சூடானின் தூதராக பணியாற்றிய நியூரெல்டின் சத்தி ( Noureldin Sati ) , பின்னர் கொங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் ருவாண்டாவில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளில் கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்கத்கது.