(எம்.எப்.எம்.பஸீர்)


நாடளாவிய ரீதியில் 313 படையினர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்றிரவு 7.00 மணி வரையிலான காலப்பகுதியில்  பாதிக்கப்பட்டிருந்ததாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

302 கடற்படை வீரர்கள், 10 இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு விமானப்படை வீரர் என 313 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கேசரியிடம் தெரிவித்தார்.இதில் அடையாளம் காணப்பட்டுள்ள 302 கடற்படை வீரர்களும் வெலிசறை, ரங்கல கடற்படை முகாம்களை சேர்ந்தவர்கள் எனவும் வெலிசறை கடற்படை முகாமின் 277 பேருக்கும் ரங்கல கடற்படை முகாமின் 25 பேருக்கும் இந்த கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு கூறியது.

 இந்நிலையில் இதுவரை கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வரும் கடற்படையினரிடையே குணமடைந்த முதலாவது வீரர் இன்று அங்கொடை தொற்றுநோய் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்.

 வெலிசறை கடற்படை முகாமில் இருந்து கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி விடுமுறையில் இரத்தினபுரியில் உள்ள தனது ஊருக்கு சென்றிருந்த போது கடந்த  ஏப்ரல் 25 ஆம் திகதி இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இரத்தினபுரி வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போது அது உறுதி செய்யப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் அங்கொடை தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக அவருக்கு அங்கு முன்னெடுக்கப்பட்ட சிகிச்சைகளின் பின்னரான 3 பி.சி.ஆர். பரிசோதனைகளில் கொரோனா வைரஸ் அவரது உடலில் இல்லை என உறுதிச்செய்யப்பட்ட பின்னர் இன்று அவர் வீடு திரும்பினார்.

 எவ்வாறாயினும் வீடு திரும்பிய அவர் அங்கு 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்  கடற்படையில் 1868 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படை வீரர்களின் 141 குடும்பங்களை சேர்ந்த 601 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.

 இந்நிலையில் விமானப்படை இசைக் குழுவின் உறுப்பினரான கோப்ரல் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவருக்கும் தொடர்ச்சியாக சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. அவருடன் தொடர்பில் இருந்த கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 62 விமானப்படை வீர வீராங்கனைகளுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில்,  அவர்கள் எவருக்கும் கொரோனா தொற்றில்லை என உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை கடந்த 3 நாட்களில்  இடம்பெற்ற பரிசோதனைகளில் 4 தரைப் படையினருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  இதுவரை அடையாளம் காணப்பட்ட தரைப்படை கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் பொலிஸ் திணைக்களத்தில் இதுவரை எவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத போதும் 240  பொலிஸார் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தகவல்கள் தெரிவித்தன.