இலங்கை மத்திய வங்கி கொவிட் - 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களின் நன்மை கருதி கொடுக்கல் வாங்கல்களின் முடிவுத் திகதியை நீடித்துள்ளது.

கொவிட் - 19 பரம்பலினால் நிதி நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதில் பாதிக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களினால் எதிர்கொள்ளப்படும் கஷ்டங்களைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கி கடன் பிற்போடுதல் மற்றும் இரண்டு மாத தொழிற்படு மூலதனத்திற்காக 4 சதவீத வருடாந்த வட்டியுடைய மீள்நிதியிடல் வசதி போன்றவற்றிற்கான வேண்டுகோளைச் சமர்ப்பிக்கும் முடிவுத் திகதியினை 2020.04.30 இருந்து 2020.05.15 வரை நீடித்திருக்கின்றது.

மேலும், ரூ.500,000 இற்கு உட்பட்ட பெறுமதியுடைய காசோலைகளின் செல்லுபடிக்காலம் காலாவதியாகியிருக்குமிடத்தில், 2020 மே 15 வரை அதனுடைய செல்லுபடியாகும் காலமாகக் கருத்திற்கொள்ள வேண்டுமென வங்கிகள் வேண்டிக்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறான நீடிப்புக்கள் 2020.04.28 ஆம் திகதியிடப்பட்ட 2020 இன் 06 ஆம் இலக்க சுற்றறிக்கையினூடாக அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.