-என்.கண்ணன்

சம்பளமும் வேண்டாம், ஆட்சியையும் கவிழ்க்கமாட்டோம், அரசாங்கத்துக்கு தேவையான ஒத்துழைப்புகள் எல்லாவற்றையும் செய்வோம், நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள் என்று ஏழு எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

நாடு பேரிடர் ஒன்றை எதிர்கொண்டுள்ள சூழலில், நாடாளுமன்றத்தைக் கூட்டாமல் இருப்பது தவறு என்றும்,- கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டி, ஒருமித்து இந்த நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் கூறியிருந்தன.

அரசியலமைப்பின் 155 ஆவது சரத்தின்படி, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஜனாதிபதியினால் கூட்ட முடியும் என்றும், அதுவே அரசியலமைப்பு நெருக்கடியில் இருந்தும், தற்போதைய நெருக்கடியில் இருந்தும் நாடு மீள்வதற்கான ஒரே வழி என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

ஆனால், ஜனாதிபதியும், அரசாங்கமும், அதனை ஏற்பதாக இல்லை.

எந்த அரசியலமைப்பைக் காட்டி நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றனவோ - அதே அரசியலமைப்பைக் காரணம் காட்டியே, நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் தனக்கு இல்லை என்று, ஜனாதிபதி கூறி வருகிறார்.

தாம் அரசியலமைப்புக்கு அப்பால் செல்லமாட்டேன் என்று, ஜனநாயகத்தின் மீது அபரிமிதமான நம்பிக்கை கொண்டவர் போன்று அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.

ஜனாதிபதியும் ஆளும்தரப்பில் உள்ளவர்களும் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்கிறார்கள்.

மறுபக்கத்தில், எதிர்க்கட்சியினரோ அதற்கு அதிகாரம் இருக்கிறது என்கிறார்கள்.

சபாநாயகர் கரு ஜெயசூரியவும் கூட எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு ஆதரவான கருத்தை ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தக் கட்டத்தில், யார் சொல்வது சரி, யார் இந்த விடயத்தை அரசியலாக்க முனைகிறார்கள் என்ற குழப்பம் சாதாரண மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

இரண்டு தரப்பமே அரசியலமைப்பில் உள்ள வெவ்வேறு பிரிவுகளை முன்வைத்து வாதம்  செய்து கொண்டிருந்தாலும், இரண்டு தரப்புகளுமே அந்த வாதத்தை பொது வெளியிலும், அறிக்கைகளிலும் தான் முன்வைக்கின்றன.

அரசியலமைப்புக்கு மேலானது என்று எதுவுமில்லை. ஆனாலும், அரசியலமைப்பில் மயக்கம் அல்லது அதில்,  சந்தேகங்கள் எழும்போது, அதனை தீர்க்கக் கூடிய ஒரே கட்டமைப்பாக இருப்பது உயர்நீதிமன்றம் மட்டும் தான்.

பொதுத்தேர்தல் பிற்போடப்பட்ட விவகாரத்தில் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உயர்நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய போது, அதனையும் ஜனாதிபதி நிராகரித்திருந்தார்.

அதற்குப் பின்னர், பல்வேறு தரப்பினரும் உயர்நீதிமன்றத்தை நாட வேண்டும், அதன் கருத்தைக் கேட்க வேண்டும் என்று கோரியதையும் அவர் ஏற்கவில்லை.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகமவும் கூட அரசியலமைப்பு சிக்கல்கள் வரும் போது உயர்நீதிமன்றத்தின் கருத்தையே அறிய வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால் தற்போதைய நிலையில் உயர்நீதிமன்றத்தை நாடுகின்ற எண்ணமும் கூட, ஜனாதிபதிக்கும் இல்லை -அவரது அரசாங்கத்துக்கும் இல்லை.

2018 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

அது தவறானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது, அந்த தீர்ப்பு

அப்போது குறுக்கு வழியில் பிரதமராக வந்த, இப்போதைய பிரதமர்  மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் தோல்வியாக கருதப்பட்டது.

அதுபோன்றதொரு சூழலை மீண்டும் உயர்நீதிமன்றத்தில் எதிர்கொள்வதற்கு அரசாங்கத் தரப்பு தயாராக இல்லை.

அத்துடன், உயர்நீதிமன்றத் தீர்ப்பு எந்த வகையிலும் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது அரசாங்கம்.

அதனால்  ஒரு நூலிழை வாய்ப்பையும் கூட, எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்க தயாராக இல்லை. அதனால் தான், உயர்நீதிமன்றத்தின் ஊடாக இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தயங்குகிறது.

இவ்வாறான நிலையில், அரசியலமைப்பு ரீதியாக மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியுமா -இல்லையா என்ற கேள்விக்கு   விடை தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள் சாதாரண மக்கள்.

இரண்டு தரப்புமே கூறிவருகின்ற நியாயங்களை மக்கள் கேட்டுக் கேட்டு குழம்பிப் போனது தான் மிச்சமாக உள்ளது.

செல்வாக்கிழந்து போன எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தைக் கூட்டி அரசியல் இலாபம் தேட முனைகின்றன என்று ஜனாதிபதி கூறுகிறார்.

நாடாளுமன்றத்தைக்  கூட்டினால் உறுப்பினர்களுக்கு கொரோனா வந்து விடும் என்றும், வீண் செலவு என்றும் ஆளும் தரப்பினர் காரணங்களைச் சொல்கிறார்கள்.

நாடாளுமன்றத்தைக் கூட்ட அரசாங்கத் தரப்பு விரும்பவில்லை. அது தான் ஒரே காரணம். அதற்காக வெவ்வேறு நியாயங்கள் கூறப்படுகின்றன.

அதேவேளை, கடந்தவாரம் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, எழுதியிருந்த கடிதம் ஒன்றில், அரசாங்க நிதியை செலவிடும் அதிகாரம், ஏப்ரல் 30ஆம் திகதிக்குப் பின்னர், ஜனாதிபதிக்கு இல்லை என்றும் அரசியலமைப்பை மீறி அரசாங்க நிதியை கையாண்டால், குடியுரிமையை இழக்க நேரிடும் என்றும் கூறியிருந்தார்.

இந்த விடயத்திலும் அரசாங்கத் தரப்பு விட்டுக் கொடுப்பதாக இல்லை. ஜனாதிபதிக்கு நிதி அதிகாரம் உள்ளது என்று வாதிட்டுக் கொண்டிருக்கிறது.

அத்துடன், அதற்கு எதிராக முடிந்தால் உயர்நீதிமன்றம் செல்லலாம் என்றும் அரசதரப்பு கூறுகிறது.

அரசியலமைப்பை காரணம் காட்டிக் கொண்டே, ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுகிறார் என்று காண்பிக்க எதிர்க்கட்சிகள் முயன்றாலும் அதற்கு ஆளும்தரப்பு விட்டுக் கொடுப்பதாக இல்லை.

அதேவேளை, நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் எஎன்ற தொடர்ச்சியான கோரிக்கைகளை ஜனாதிபதி நிராகரித்துள்ள நிலையில், அலரி மாளிகையில் நாளை அனைத்து முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர்களையும் சந்திப்புக்கு அழைத்திருக்கிறார் பிரதமர் மகிந்த ராஜபக்ச.

நாடாளுமன்றத்தைக் கூட்டினால் கொரோனா வரும் என்றவர்கள் இப்போது அலரி மாளிகையில் அதிகாரபூர்வமற்ற நாடாளுமன்றக் கூட்டம் ஒன்றை நடத்த முனைவதகவே தெரிகிறது.

தற்போதைய நெருக்கடி நிலை குறித்து தெளிவுபடுத்தவே பிரதமர் இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது,  கலைக்கப்பட்டது தான், அதனை மீண்டும் கூட்ட முடியாது, என்றால், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களாக இருந்தவர்களை மீண்டும் கூட்டி ஏன் விளக்கமளிக்க வேண்டும்?

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டால், அவர்கள் மக்களின் பிரதிதிதிகளே அல்ல, அந்த முடிவில் உறுதியாக இருந்தால், முன்னாள் உறுப்பினர்களைக் கூட்ட வேண்டிய தேவை இல்லை.

இந்த நிலையில் நாளை பிரதமர் கூட்டும் கூட்டம் வெறுமனே விளக்கமளிப்பதற்கானதாக இருப்பதற்கே வாய்ப்பு உள்ளது.

அதேவேளை, அடுத்தடுத்த அரசியல் நாடகங்களுக்கான திறவுகோலாகவும் இந்தக் கூட்டம் மாறக் கூடும்.

இதில் எந்த வாய்ப்பை பிரதமர் தெரிவு செய்து கொள்ளப் போகிறார்?