(நேர்காணல்:- ஆர்.ராம்)

கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையால்  மத்திய வங்கியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையில் கடன்களை மீள வசூலிக்கும் செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எனினும் எதிர்காலத்தில் அவற்றை மீள வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தமது உண்மையான நிலைமைகளை தெளிவுபடுத்துகின்ற போது  அவர்கள் கடன்களை மீளளிப்பதற்கான செயற்பாட்டில் நெகிழ்வுதன்மையை கடைப்பிடிக்க உள்ளோம் என்று கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும், பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான எஸ். ரெங்கநாதன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு

கேள்வி:-கொரோனா தொற்றால் உலகளாவிய ரீதியில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படுமென எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை போன்ற வளர்முக நாடுகளின் அதன் பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கும்?

பதில்:-கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச பொருளாதாரத்தில் 3சதவீதமான வீழ்ச்சி ஏற்படவுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

அவ்வாறான நிலையில் வளர்முக நாடுகளிலும் அதன் தாக்கம் இருக்கும். இலங்கையை எடுத்துக்கொண்டால் 2019ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரவளர்ச்சி வீதமானது 2.3சதவீதமாகவே காணப்பட்டது. 

2020, ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரவளர்ச்சி உலகவங்கியின் கூற்றுப்படி (-0.3) இலிருந்து (-0.5)சதவீதத்தாலும்  சர்வதேசநாணயநிதியத்தின் கூற்றுப்படி (-0.5)சதவீதத்தாலும் குறையுமெனக கணிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி இந்தாண்டு  1.5சதவீதத்தாலேயே வளர்ச்சி இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.  இந்த அடிப்படையில் மொத்த தேசிய உற்பத்தி இருக்கப்போகின்றது. 

2021ஆம் ஆண்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 4சதவீதத்திலிருந்து 4.5சதவீதம் வரையில் காணப்படலாம் என்று சர்வதேச நாணய நிதியமும், இலங்கை வங்கியும் தெரிவித்துள்ளன.

கேள்வி:- இதில் இலங்கையின் வங்கித்துறையின் நிலைமைகள் எவ்வாறு அமையவுள்ளன? 

பதில்:- வங்கிகள் கடன்களை வழங்குவதன் ஊடாக பெற்றுக்கொள்ளும் வட்டிவீத இலாபங்களிலேயே அதிகளவில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன. அந்தவகையில் அடுத்து வரும் காலத்தில் கடன்களை வழங்கும் பெறுமானம் குறையப்போகின்றது. 

வணிக கட்டமைப்புக்களின் செயற்பாடுகளற்ற தன்மையால் பணம் வங்கிகளுக்கு உட்திரும்பாத நிலைமை அதிகரிக்கும். அதேபோன்று கடன்களுக்கான வட்டி வீதங்களும் குறைவடைவதால் அதன் மூலமான வருமானமும் குறைவடையும். அத்துடன் வங்கிகள் கடன்களை வழங்குவதும் குறைவடையும். 

இதனைவிடவும் வங்கிகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதிகள் மூலமாக கிடைக்கும் வருமானங்களும் குறைவடையவுள்ளன. இவ்வாறு பார்க்கின்றபோது வங்கிகளின் நிகரவருமானம் குறைவடையும். ஆகவே வங்கிகளின் இலாபம் பாதிப்படைவதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளன.

கேள்வி:- இத்தகைய சவாலான நிலைமைக்கு முகங்கொடுப்பதற்காக நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வங்கி எத்தகைய தயார்ப்படுத்தலை மேற்கொண்டுள்ளது?

பதில்:- அனைத்து வங்கிகளும் இலங்கை மத்திய வங்கியால் வழங்கப்பட்டுள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமைகளை எப்போதுமே பின்பற்றுவது வழமையாகும். அதில் குறிப்பாக பணப்புழக்கவீதம்( Liquid Assets Ratio ), வங்கிகளின் மொத்த மூலதனவீதம்( capital Adequacy ratio ) ஆகிய இரண்டையும் குறிப்பிட்ட வரையறைகளுடன் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். 

குறிப்பாக பணப்புழக்க வீதத்தினை 20சதவீதத்திற்கு குறைடையாது கடைப்பிடிப்பதோடு வங்கிகளின் மொத்த மூலதன வீதத்தினை 14 சதவீதமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.

கொமர்ஷல் வங்கியைப் பொறுத்தவரையில், பணப்புழக்கவீதம் 30சதவீதத்திற்கு அதிகமாகவும் வங்கிகளின் மூலதனவீதம் 16சதவீதத்திற்கு அதிகமாகவும் தற்போதுள்ளது .ஆகவே எமக்கு இந்த நெருக்கடிக்கு முகங்கொடுப்பதற்கு இயலுமாக இருக்கின்றது.

கேள்வி:- வங்கிகள் வழங்கிய கடன்களுக்கான மீளளிப்புக்காலம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் அடுத்தகட்டம் எவ்வாறிருக்கப்போகின்றது?

பதில்:- கடன்பெற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகளின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கியால் கடன்களை மூன்று முதல் ஆறுமாதங்கள் வரை வசூலிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும் இயல்பு நிலைமை தோற்றம் பெற்ற பின்னர் முதலையும், கடனையும் நிச்சயமாக மீளளிக்கவேண்டும்.

கேள்வி:- கடன்பெற்ற சதாரணதரப்பினர்களுக்கு மீளளிப்பதில் இக்கட்டான நிலைமைகள் காணப்படுமாயின் அதற்காக விசேட பொறிமுறைகள் ஏதேனும் வகுக்கப்படவுள்ளதா?

பதில்:- கடன் பெற்றவர்கள் எந்த வகையறைகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தத்தமது வங்கி முகாமையாளர்  அல்லது அலுவரை நேரில் சந்தித்து தமது உண்மையான நிலைமைகளை தெளிவுபடுத்த முடியும். அதனடிப்படையில் அவர்கள் செலுத்த வேண்டிய முதல் மற்றும் வட்டியை உள்ளடக்கிய தொகைக்கான தவணைக்கட்டணக் காலத்தினை மறுபரிசீலைக்கு உட்படுத்ததயாராகவே உள்ளோம். 

அதன் மூலம் அவர்கள் தவணைக் கட்டணகாலத்தினை நீடிப்பதற்கோ அல்லது தவணைக் கட்டண தொகையை அதிகரித்தோ மீளச் செலுத்த முடியும். அதேபோல வாடிக்கையாளர்களின் நிலைமைகளுக்கு அமைவாக அடகுகளுக்கான மீளளிப்புத்தொகைக்கான தவணைக்கட்டண முறைமையை இலகுபடுத்தவதற்கும் திட்டமிட்டுள்ளோம்.

கேள்வி:- சேமிப்பு மற்றும் நீண்டகால வைப்புக் கணக்குகளுக்கான வட்ட வீதங்கள் குறைவடைவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா?

பதில்:- ஒரு நாடு பொருளாதார ரீதியான முன்னேற்றமடைய வேண்டுமாயின் அதன் வட்டிவீதங்கள் குறைவாகவே இருக்கவேண்டும் என்பது பொதுப்படையானது. காரணம், உற்பத்தியாளர்கள், முயற்சியாளர்களுக்கு குறைந்த வீதத்திலேயே கடன்களை வழங்க வேண்டும் என்பதால் நிதி முதலீட்டாளர்களுக்கும் குறைந்த வட்டிவீதத்தினையே வழங்க முடியும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டு வருவதால் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் குறைந்தளவான வட்டிவீதங்கள் இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றன. 

இதன் காரணமாக திறைசேரி வட்டி வீதங்கள் உள்ளிட்டவற்றை குறைந்தளவில் பேணி வருகின்றார்கள். அவ்வாறான குறைப்புக்களை அரசாங்கம் மேற்கொள்கின்றபோது வங்கிகளும் சேமிப்புக்களுக்கான வட்டவீதங்களை குறைத்தே வந்திருக்கின்றன.  அதனை தவிர்க்கவும் முடியாது.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக 12சதவீதமாக இருந்த நிலையான வைப்புக்களுக்கான வட்டிவீதம் தற்போது 8சதவீதமாகவும் சேமிப்பு வைப்புக்களுக்கான வட்டவீதம் 3.5சதவீதமாகவும் குறைவடைந்துள்ளது.  இந்நிலையில் எதிர்வரும் காலத்தில் நீண்டகால வைப்புக்களுக்கான வட்டிவீதம் 6சதவீதம் வரையில் குறைவடைவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. இவ்வாறான நிலைமையொன்று 2014இல் காணப்பட்டது.

கேள்வி:- அந்நியச்செலாவணியின் வீழ்ச்சி எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தவுள்ளது?

பதில்:- எமது நாட்டின் அந்நியச் செலாவணியானது, சுற்றுலாத்துறை, வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களின் வருமானம், ஏற்றுமதிகள் ஆகியவற்றிலேயே அதிகளவில் தங்கியுள்ளது. கடந்த ஆண்டில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் இடம்பெற்றிருந்தாலும், சுற்றுலாத்துறை மூலமாக 3.6பில்லியன் டொலர்களும், வெளிநாட்டு பணியாளர்களால் 7பில்லியன் டொலர்களும் கிடைத்திருந்தன.

தற்போதைய வைரஸால் ஏற்பட்ட முடக்க நிலைமையால் சுற்றுலாத்துறை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பணியாளர்களும் வருமான இழப்பினைச் சந்தித்துள்ளார்கள். ஏற்றுமதிகள் இடம்பெறாதபோதும் இறக்குமதிகளுக்கான செலவீனங்கள் அதிகமாக காணப்படுகின்றன.

கேள்வி:- இவ்வாறான நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்குமாற்று வழிகள் உள்ளனவா?

பதில்:- ஒவ்வொரு சவால்களும் வாய்ப்புக்களை உருவாக்குகின்றன. ஆகவே நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு மாற்று வழிகள் நிச்சமாக இல்லாமலில்லை. தற்போது கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு அரசாங்கம் தலைமை தாங்கினாலும் இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைகக்கும் அதில்பாரிய பொறுப்பு காணப்படுகின்றன. 

நாம் அனைவரும் எமது பொறுப்பினை உணர்ந்து கொரோனா ஒழிப்பு செயற்பாட்டிற்கு ஒத்துழைப்புக்களை வழங்குகின்ற போது விரைவாக இயல்பு நிலை திரும்புவதற்கு வாய்ப்புக்கள் ஏற்படும்.

நியூஸிலாந்து, வியட்நாம், சீனா(கணிசமானஅளவு) கொரோன நெருக்கடியிலிருந்து விடுபட்டுள்ளன. ஆகவே இலங்கையும் விரைவாக அவ்வாறு விடுபடவேண்டும். அதன் மூலம் சுற்றுலாத்துறையை மீளகட்டியெழுப்பமுடியும். அதுபோன்று மேலும் பல்வேறு வருமானங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுவதற்கு வழிஅமையும். 

கேள்வி:- உள்நாட்டு பொருளாதாரத்தினை சீரமைப்பதற்கு விவசாயத்துறை மேம்படுத்துவதும், சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊக்குவிப்பதும் அவசியமென்று கருதப்படும் நிலையில் அதற்காக வங்கிகளின் வகிபாகம் எவ்வாறு அமையவுள்ளது?

பதில்:- நீங்கள் குறிப்பிடும் இருதுறைகளின் வளர்ச்சி மிகவும் முக்கியமானதாகின்றது. இலங்கையின் பொருளாதாரத்தில் மூன்றிலிரண்டு பங்கு விவசாயத்துறையின் பங்களிப்பு காணப்படுகின்றது. அதேபோன்று சிறியமற்றும், நடுத்தரதரப்பினரை ஊக்குவிப்பதும் மிகவும் முக்கியமான தாகின்றது. விவசாயத்துறையைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு புறசூழல் அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன. 

ஆகவே இலங்கை போன்ற வளர்முக நாடுகளுக்கு சிறிய,நடுத்தர முயற்சிகளை வளர்ப்பதன் ஊடாகவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். எமது வங்கி உட்பட அனைத்து வங்கத்துறையினருக்கும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள் தொடர்பில் ஆழ்ந்த கரிசனைகள் காணப்படுகின்றன.

உதாரணமாக கூறுவதாயின், எமது வங்கியில் கணக்குகளைப் பேணிவரும் சிறிய, நடுத்தர முயற்சியாளர்களின் செயற்பாடுகளை அவதானித்து அவர்களை பிஸ்கிளப்(BIZ Club) என்ற கட்டமைப்பிற்குள் உள்வாங்குகின்றோம். ‘உறவுமுகாமைத்துவம்’ என்ற கோட்டிபாட்டின் அடிப்படையில் தான் இந்தகட்டமைப்பை நாம் உருவாக்கியுள்ளோம். இந்த கட்டமைப்பில் உறுப்பினராக உள்வாங்கப்படும் ஒருவரின் செயற்பாடுகள், முன்னேற்றங்கள், கணக்குகள் போன்றவற்றை அவதானிப்போம்.

அவ்வாறான அவதானிப்பின் மூலமாக வினைத்திறனாக செயற்படும் ஒருவருக்கோ அல்லது நெருக்ககளை சந்திக்கும் ஒருவருக்கோ நாம் உரிய ஆலோசனைகளை முன்கூட்டியே வழங்கி வழிப்படுத்துவதே எமது திட்டமாகும். அதுமட்டுமன்றி சந்தைப்படுத்தல், நிதி முகாமைத்துவ பயிற்சிகள், திறன் அபிவிருத்தி உள்ளிட்ட இதர நிகழ்ச்சித்திட்டங்களையும் சிறிய, நடுத்தர தரப்பினருக்காக முன்னெடுத்துவருகின்றது.

கேள்வி:- சர்வதேச வர்த்தகம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், டொலரின் பெறுமதி மட்டும் எவ்வாறு அதிகரித்துச் செல்கின்றது? இதற்கான பிரத்தியேக காரணங்கள் ஏதுமுண்டா?

பதில்:- டொலர்களின் பெறுமதியானது கேள்வியின் அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்படுகின்றது. தற்போதைய சூழலில் அனைத்து வணிக நடவடிக்கைளிலும் இடம்பெறவில்லை. இருப்பினும் ஏற்கனவே இறக்குமதிகளை மேற்கொண்டமைக்கான கொடுப்பனவுகளை உரிய காலத்தில் மேற்கொள்ளவேண்டும்.    அதில் மிக முக்கியமாக மசகு எண்ணெய்கொள்வனவுக்கான கொடுப்பனவைச் செலுத்த வேண்டியுள்ளது.

அதனைவிடவும் பெறப்பட்ட கடன்களுக்கான முதல்களையும் வட்டிகளையும் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் உள்நாட்டின் தேவைகள் அதிகமாக உள்ளன. நாட்டின் வருமானம் வெகுவாக குறைவடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் நாட்டிலிருந்து வெளிச்செல்லும் நிதிக்கான கேள்வி அதிரிக்கப்படுகின்றபோது டொலருக்கான பெறுமதி அதிகரிக்கின்றது. இதனைவிடவும் அத்தியாவசிய மற்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையும் காரணமாக அமைகின்றது.

கேள்வி:- கொரோனா நெருக்கடியால் அடுத்து வரும் காலத்தில் தொழிற்படையில் அதிகளவான வேலை இழப்புக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டால் அச்சவாலுக்கு எவ்வாறு முகங்கொடுக்க முடியும்?

பதில்:- தற்போதைய நிலைமகளை வைத்துப்பார்கின்றபோது நீங்கள் குறிப்பிடும் வகையில் அதிகளவான வேலை இழப்புக்கள் ஏற்படுவதற்கு சந்தர்ப்பங்கள் இல்லாமில்லை. ஒவ்வொரு துறைகளிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் அத்தகைய சந்தர்ப்பங்களை உருவாக்கியுள்ளன. 

இதனைவிடவும் மத்திய வங்கி 50பில்லின் ஒதுக்கீட்டைச் செய்துள்ளது. தொழில் வழங்குனர்களின் நெருக்கடியான நிலைமைகளை சீர்செய்வதற்காக வெறுமனே 4சதவீதவட்டியுடன் கடன்களை வழக்குவதற்கும் அனுமதிக்கப்படுகின்றது. 

எனினும் இந்த சலுகையை பெறும் எந்தவொரு நிறுவனமும் தமது பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடியாது என்றும் ஊழியர் சேமலாபநிதி, உழியர் நம்பிக்கை நிதி உள்ளிட்டவற்றை முறையாக வழங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கின்றது. இதுவொருபுறமிருக்க, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையானது ஒருதற்காலிகமானதாகும். 

ஆகவே அதிலிருந்து மீளமுடியும் என்ற நம்பிக்கைக் கொண்டிருக்க வேண்டும். இதனை விடவும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்அந்த நிறுவனத்தில் இன்னொருபணியை தொடர்வதற்கோ அல்லது வேறொரு நிறுவனத்தில் பிறிதொரு பணியை ஆற்றுவதற்கோ மனதளவில் தயராக இருக்கவேண்டும். தற்போது வீட்டிலிருந்து பணிகளை புரிவதற்கான நிலைமைகளை உருவாக்கப்பட்டாகிவிட்டது. 

ஆகவே நிலைமைகள் மாறுகின்றபோது அதற்கேற்ப நெகிழ்வுத்தன்மையுடன் எம்மையும் மாற்றிக்கொள்வதற்கு மனந்தளராது நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கோரிக்கை.

கேள்வி:- அண்மைய நாட்களில் இணையவெளி மூலமாகபொருட்கள், சேவைகளின் கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்துள்ளமையானது தொழிலாளர்கள் வேலையிழப்பில் செல்வாக்குச் செலுத்துமல்லவா?

பதில்:- நிறுவனங்கள் இலத்திரனியல் முறைமையை பயன்படுத்தி அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். ஆனால் அவற்றால் திருப்திகரமான சேவைகளை வழங்க முடியாது. ஆகவே வேலையிழப்புக்கள் ஏற்படுமென்று கருதமுடியாது. கொரோனாவிற்குப் பின்னரான காலத்தில் புதிய முறையில் அனைவரும் செயற்படப் போகின்றோம் என்பது வெளிப்பட்டுள்ளது.