நாம் அரசியலமைப்பை மீறி செயற்பட எத்தனிக்கும் குழுவினர் அல்ல. அப்படியான கருத்துக்கள் எதையும் நாம் தெரிவிக்கவில்லை. அரசியலமைப்பின் படி பாராளுமன்றத்தை கூட்டவே கோருகிறோம். ஏனென்றால் மக்கள் தனி நபர்களுக்கு அதிகாரத்தை வழங்கவில்லை. பாராளுமன்றமே நாட்டின் உயர் அரசியல் அதிகார பீடமாகும். ஆகையினாலேயே அதை கூட்டி நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் நிதி தொடர்பான சட்ட ஏற்பாடுகளைப் பெற்றுக்கொள்ளச் சொல்கிறோம். இதற்கு எமது ஆதரவு நிச்சயம் உண்டு.
அதே வேளை அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக்கொண்டால் மக்களுக்கு உரிய சேவைகளை செய்யத் தெரிந்திருக்க வேண்டும். காலம் காலமாக ஒன்றுமே செய்யாதவர்களிடம் அமைச்சுப்பொறுப்பை வழங்கினால் அவர்கள் வழமை போன்று காலத்தைத் தான் கடத்துவார்கள். இன்று மலையகத்தில் அது தான் நடக்கின்றது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.
அவர் வழங்கிய நேர்காணலின் முழு வடிவம் இங்கு தரப்பட்டுள்ளது.
கேள்வி: 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுகள் விடயத்தில் பக்கச்சார்பான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக சர்ச்சைகள் அதிகரித்துள்ளனவே?
பதில்: அது தானே உண்மை, அது அரசாங்கத்துக்கே விளங்கியுள்ள காரணத்தினால் தானே அது குறித்து புதிய புதிய சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன? ஆனால் இங்கு இடம்பெறும் சம்பவங்கள் என்ன? அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே இந்த கொடுப்பனவுகள் மிகுந்த சர்ச்சைகளை சந்தித்து வருகின்றன. அவற்றை வழங்கும் பொறுப்பை கிராம அதிகாரிகளும் சமுர்த்தி உத்தியோகத்தர்களும் மட்டும் ஏற்றிருந்தால் நியாயம் கிடைத்திருக்கும்.
ஆனால் உள்ளூராட்சி உறுப்பினர்களிலிருந்து கட்சித்தொண்டர்கள் வரை அதில் தலையிட்டு அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்த காரணத்தினாலேயே இந்த பிரச்சினை. கொடுப்பனவு வழங்கும் இடத்தில் கட்சிரீதியாக செயற்படும் நபர்களுக்கு என்ன வேலை? அது மட்டுமா எல்லோருக்கும் வழங்க வேண்டிய இந்த கொடுப்பனவை ஏன் அரசாங்கம் தோட்டத்தொழிலாளர்களுக்கு மட்டும் ஆரம்பத்தில் மறுத்தது? நாங்கள் எல்லாம் அது குறித்து அழுத்தம் கொடுக்கும் வகையில் பேசிய பின்னர் வருமானம் குறைந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என மீண்டும் அரசாங்கம் சுற்றுநிருபம் மூலம் அறிவித்தது.
நாம் சொல்லியே தொழிலாளர்களுக்கும் கிடைக்க வழியேற்பட்டது என்று கூறும் அமைச்சர்கள் ஏன் அதை ஆரம்பத்திலேயே செய்யவில்லை என்பது தான் எமது கேள்வி. ஆனால் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் என்று அறிவித்தும் அது எவருக்குமே கிடைக்கவில்லை. ஒரு சிலருக்குக் கிடைத்திருந்தாலும் அது ஒரு கட்சி சார்ந்த உறுப்பினர்களுக்கே கிடைத்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் தாராளமாக இருக்கின்றன.
கேள்வி: இறுதி மாதத்தில் 5 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான சம்பளத்தொகையை பெற்ற தொழிலாளர்கள் மாத்திரமே கொடுப்பனவை பெறலாம் என்று தானே சுற்றுநிரூபம் கூறுகிறது?
பதில்: ஆம் அதை நாம் மறுக்கவில்லை ஆனால் இவ்வருடம் பெப்ரவரி மாதத்திலிருந்து தோட்டங்களில் வேலை நாட்கள் இல்லை. அதுவும் மார்ச் மாதம் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட காலத்தில் பத்து நாட்கள் கூட வேலை வழங்கப்படவில்லை. அப்படியிருக்கும் போது பெரும்பாலான அனைத்துத் தொழிலாளர்களுமே குறித்த தொகைக்கு கீழேயே வேதனத்தைப் பெற்றிருப்பர். அதனால் தான் இது அனைவரையும் சென்றடைய வேண்டும் என வலியுறுத்துகிறோம். இந்த நாட்டுக்கு தேசிய வருமானத்தைப் பெற்றுத்தரும் முதுகெழும்பாக இருப்பவர்களை இந்த அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் எந்தளவுக்கு புறக்கணிக்கின்றனர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
கேள்வி: இப்படியான பல பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தை கூட்டுவதன் மூலம் தீர்வு காண முடியுமா?
பதில்: நாட்டில் பல பிரச்சினைகளில் இது பிரதானமானதொன்று. இது மட்டுமல்லாது ஜனநாயக ரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்கவே நாம் பாராளுமன்றத்தை கூட்டச்சொல்கிறோம். அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானாலும் பாராளுமன்றை கலைத்து அடுத்த பாராளுமன்றம் அமையும் வரை இடைப்பட்ட நூறு நாட்களுக்கே அவரால் நிதி விடயங்களை கையாள முடியும். அதற்குப்பிறகு பாராளுமன்றத்தின் மூலமே அவர் நிதி சார்ந்த விடயங்களை முன்னெடுக்க முடியும். அதற்கு மக்கள் பிரதிநிதிகளின் அங்கீகாரம் அவசியம்.
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு உலக நாடுகள், அரச சார்பற்ற சர்வதேச மற்றும் உள்ளூர் அமைப்புகள் பல பில்லியன் ரூபாய் நிதி உதவிகளை வழங்கியுள்ளன. ஆனால் இதை யாரின் அனுமதியுடன் யாருக்கு பயன்படுத்துகின்றனர் போன்ற விடயங்கள் இரகசியமாகவே இருக்கின்றன. இது தான் ஜனநாயகமா? பாராளுமன்றத்துக்கு வெளியே எதிரணியிலிருந்து கொண்டு எம்மால் யாரிடம் கேள்வி எழுப்புவது ? பாராளுமன்ற கட்டமைப்பு இருந்தால் இது குறித்து பேசலாம். அதற்கு அரசாங்கம் பதில் சொல்லியே தீர வேண்டும் என்பதால் தான் அது குறித்து கதைத்து வருகின்றோம்.
மேலும் அரசியலமைப்புக்கு உட்பட்டே நாம் செயற்படக் கூறுகிறோம். இதற்காக நாம் எந்த சலுகைகளையும் எதிர்ப்பார்க்கவில்லை. எமக்கு சம்பளமோ ,கொடுப்பனவுகளோ அல்லது உணவோ ஒன்றுமே தேவையில்லை. இவ்விடயத்தில் எந்த வித நிபந்தனைகளுமின்றி நாம் அரசாங்கத்துக்கு ஆதரவு தயார். ஆனால் நாம் அலரி மாளிகையில் பாராளுமன்றத்தை கூட்டச் சொல்லவில்லை.
கேள்வி: அப்படியானால் மாற்றுத்தீர்வாக தேர்தல் ஒன்றை நடத்துவதை வரவேற்கின்றீர்களா?
பதில்: ஒரு நாட்டின் ஜனநாயக தன்மையை நிலைநிறுத்துவதற்கு தேர்தல்கள் இடம்பெறுவது கட்டாயமாகும். ஆனால் இ்ப்படியான சூழலில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு யார் தான் விரும்புவார்கள்? எங்ஙனம் பிரசாரக்கூட்டங்களை நடத்துவது ? மக்கள் முதலில் உயிரை பணயம் வைத்து வாக்களிக்க வருவார்களா? மேலும் மக்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கைள் எடுத்துள்ளோம் என்று கூறும் அரசாங்கம் தேர்தலுக்காக அதை தளர்த்துவது சுயநலமான விடயமாகும். தேர்தல் ஒன்றை நடத்துவதில் உள்ள ஆபத்தை உணர்ந்து தான் நாம் பாராளுமன்றை கூட்டச்சொல்கிறோம். இதில் வேறு காரணங்கள் இல்லை. அதே வேளை கொரோனா தொற்று முழுமையாக நீங்கி பழைய நிலைமைக்கு நாடும் நாட்டு மக்களும் திரும்பிய பிறகு தேர்தலை நடத்தலாம். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தலுக்கு முகங்கொடுத்த நாம் தயாராக இருக்கின்றோம்.
கேள்வி: இக்கட்டான இந்நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி நிவாரணங்களை வழங்குவதில் பின்னிற்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றனவே?
பதில்: நாம் இன்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவில்லை. எம்.பி என்ற அந்தஸ்த்து கூட கிடையாது. ஆனால் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளும் வெவ்வேறு பிரதேசங்களைப் பொறுப்பேற்று நிவாரணங்களை வழங்கி வருகின்றன. எமது கூட்டணியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்குத் தேவையான நிவாரணங்களைப் வழங்கி வருகின்றனர். அதற்கு பிரதேச ரீதியாக இருக்கும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர். பொருட்கள் விநியோகத்தில் முன்னின்று செயற்படுகின்றனர். அதே வேளை தலைநகரிலும் நாம் நிவாரணங்களை வழங்கி வருகின்றோம். அநேகமான வர்த்தகர்கள் எமக்கு பொருட்களை வழங்கினர். நாமும் எமது சொந்த நிதியின் மூலம் பொருட்களை கொள்வனவு செய்து மக்களுக்கு உதவி வருகிறோம். அதை படம் பிடித்து போட்டு கொள்வதில் எனக்கு உடன்பாடுகளில்லை.
கேள்வி: தலைநகரிலுள்ள மலையக இளைஞர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு திரும்பச்செய்வதில் என்ன நடவடிக்கைளை எடுத்திருக்கின்றீர்கள்?
பதில்: ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டவுடன் நானே முதன் முதலில் இவர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தேன். சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றும்படியும் அவசரப்பட்டு தமது சொந்த இடங்களுக்கு திரும்ப வேண்டாம் என்றும் அவர்களிடம் கேட்டிருந்தேன். திடீரென அரசாங்க அமைச்சர்கள் அவர்களை ஒரே நாளில் கொண்டு வருகிறோம் என களத்தில் இறங்கி உள்ளனர். கொழும்பின் சில பிரதேசங்களில் வைரஸ் பரவல் அதிகரித்தவுடன் பேச்சை மாற்றி விட்டார்கள்.
ஆனால் இறுதியில் என்ன நடந்தது? 7 ஆயிரம் பேர் களவாக வந்து சேர்ந்து விட்டனர் என முழு மலையக இளைஞர் சமூகத்தையும் இழிவு படுத்தி விட்டனர். அந்தளவுக்கு மோசமானவர்கள் இல்லை எமது இளைஞர்கள். இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் பொய் கூறினால் இராணுவத்தினரும் பொலிஸாரும் தோட்டங்கள் தோறும் சென்று தேடுதல் நடத்துவதற்கும் சந்தர்ப்பம் உள்ளது. ஆனால் உடனடியாக பிரதி பொலிஸ் மாஅதிபர் அந்த தகவலில் உண்மை இல்லை என்று அறிவித்ததால் பதற்றம் தணிந்தது. ஏதாவதொரு வழியில் மலையக மக்களை இழிவுபடுத்துகின்றவர்கள் தான் இன்று அரசாங்கத்தின் பக்கம் இருக்கின்றனர். இவ்வாறு வாய்க்கு வந்தபடி மலையக சமூகத்தைப் பற்றி பேசுவதை கண்டிக்கின்றோம்.
கேள்வி: தமிழ் மக்கள் தொடர்பில் பிரச்சினைகளை பேசுவதற்கு அரசாங்கத்தின் பக்கம் இரண்டு அமைச்சர்கள் மாத்திரம் தானே இருக்கின்றார்கள்?
பதில்: ஒருவரோ இருவரோ முதலில் அமைச்சுப்பதவி ஒன்றை பெற்றுக்கொண்டால் அதை பயன்படுத்தத் தெரியவேண்டும். ஒரு சமூகத்துக்கு ஒன்றுமே செய்யாது அத்தனை வருடம் இருக்கிறோம் இத்தனை வருடம் பழமையான கட்சி என்று பெருமையடித்துக்கொள்வதில் என்ன நடந்து விடப்போகின்றது? இவ்வாறானவர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தினார்களோ அந்த பழக்கம் தான் எதிர்காலத்திலும் தொடரும். என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நான் நான்கு வருடங்களில் என்ன செய்திருக்கிறேன் என பட்டியலிடத் தேவையில்லை. அவை என்னவென்பதை மலையக மக்களே அறிவர். அதிலும் குறை கண்டவர்களுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் நல்ல பதிலை அளித்தனர்.
எமது கூட்டணியின் 6 உறுப்பினர்களும் கடந்த 4 வருடங்களில் மேற்கொண்ட பணிகளை மக்களே கூறுவார்கள். யாரும் யாருக்கும் இடையூறு விளைவிக்காமல் அவரவருக்கு உள்ள பொறுப்புகளை முன்னெடுத்தோம். ஆனால் இப்போது என்ன நடக்கின்றது? 6 மாதத்தில் மலையகத்தையே மாற்றப்போகிறோம் என்று கூறியவர்கள் இன்று கண்ணுக்குத்தெரியாத கொரோனா வைரஸ் மீது பழியை போட்டு விட்டு ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு அமைச்சுப்பதவியை பயன்படுத்த தெரியாது.
கேள்வி: ஆயிரம் ரூபா நாட்சம்பளத்தைப் பெற்றுத்தருவதாக உறுதியளிக்கப்பட்டிருக்கின்றது அல்லவா?
பதில்: ஆம் கிடைக்கும். நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கான கேள்வி எழும் போது ஆயிரம் ரூபாயை கொடுப்பார்கள். 'நாம் எங்கே வாக்குறுதி வழங்கினோம் ? ஜனாதிபதி தானே தருகிறேன் என்றார்' என இப்போது பேச்சை மாற்றுகிறார்கள். இப்படியெல்லாம் உருட்டு புரட்டுகள் எமக்குத் தெரியாது. ஜனாதிபதி தேர்தல் முடிவுற்றவுடன் அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போது எமது கோரிக்கையை ஏற்று தான் ஆயிரம் வழங்கப்படப்போகின்றது என்று கூறியவர்கள் தானே இவர்கள்? எங்கள் பரம்பரை எவரையும் ஏமாற்றும் பரம்பரை இல்லை, சொல்வதைத் தான் செய்வோம், செய்வதைத் தான் சொல்லுவோம் என்று ஊடகங்கள் முன்பாக டிசம்பர் மாதத்திலிருந்து மார் தட்டி சூளுரைத்து வந்தவர்கள் ஏப்ரல் 7 ஆம் திகதி கொரோனா மீது பழியை போட்டு விட்டு தப்பித்துக்கொண்டனர். நாட்டுக்கு பல பில்லியன் கணக்கில் நிதி கிடைத்திருக்கின்றது. அதிலிருந்தாவது தொழிலாளர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்திருக்கலாம். அதை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு திராணியில்லை. மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே இந்த அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கிட்டும். அது தமக்கு இல்லை என்பதை அறிந்தே இவர்கள் மௌனம் காக்கின்றனர்.
கேள்வி: உங்கள் ஆட்சி காலத்தில் 50 ரூபாய் சம்பள அதிகரிப்பை உங்களால் பெற்றுக்கொடுக்க முடியவில்லையே?
பதில்: அதில் எந்த ஔிமறைவுகளும் இல்லை என்பதை உறுதியாகக் கூறுவேன். உண்மையை நாடே அறியும். தொழிலாளர்களும் அறிவர். அத்தொகையை பெற்றுக்கொடுக்க குறித்த அமைச்சிலிருந்து நிதி ஒதுக்க பிரதமர் சம்மதித்தாலும் அப்போதைய அமைச்சர் நவீன் திசாநாயக்க அதற்கு தடையாக இருந்தார். அவர் மறுப்பு தெரிவித்தமைக்கு மலையக பிரதிநிதி ஒருவரே முழுக்காரணம். அதை கிடைக்க விடாமல் செய்தது அவர்கள் தான் என்ற உண்மை ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெரியும். இந்த 50 ரூபாய் மட்டுமல்ல. மலையக சமூகத்துக்குக் கிடைத்திருக்க வேண்டிய தேசிய பாடசாலைகள், பல்கலைக்கழக கட்டமைப்புகள், வீடமைப்பு போன்ற பல விடயங்களை கடந்த காலங்களில் தடுத்து நிறுத்திய பெருமை இவர்களுக்குண்டு. மக்கள் தீர்ப்பு தானே மகேசன் தீர்ப்பு? இவர்களுக்கெல்லாம் தேர்தல் பதில் கூறும்.
கேள்வி: இந்த முறை நீங்கள் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுகின்றீர்கள். தோட்டத்தொழிலாளர்கள் பற்றி அவர் அக்கறை கொண்டிருக்கிறாரா?
பதில்: ஏன் இல்லை? ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது அவர்களுக்கான நிவாரணத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். மட்டுமல்லாது கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் போதும் அவர் இது குறித்து கதைத்திருக்கிறார். நாம் எதிரணியில் இப்போது இருப்பதால் அது குறித்து சில ஊடகங்கள் முன்னிலைப்படுத்துவது இல்லை என்பதே உண்மை. ஜனாதிபதியுடன் அவர் என்ன பேசினார் அதற்கு அவர் என்ன பதில் கூறினார் என்பதை எவரும் சஜித்தின் பிரத்தியேக சமூக ஊடகப் பக்கம் சென்று அறிந்து கொள்ளலாம்.
-நேர்காணல் : சிவலிங்கம் சிவகுமாரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM