உலகளாவிய தொற்றுநோய் பரவலின்போது ' குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் '  சீனா

03 May, 2020 | 09:23 AM
image

கொவிட் -19 தொற்றுநோயினால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் சவால்களுக்கு ஈடுகொடுப்பதற்கு உலக நாடுகள் பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், சர்ச்சைக்குரிய தென்சீனக்கடல் பிலாந்தியத்தில் பெய்ஜிங்கின் இராணுவ நகர்வுகள் இடையறாது தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டேயிருக்கின்றன. அண்மைய நாட்களில், அந்த கடல் பிராந்தியத்தில் சீனா இராணுவ ஒத்திகைகளை நடத்தியிருப்பதுடன் பெருமளவிலான இராணுவ தளபாடங்களை குவித்திருக்கும் அதேவேளை, அங்குள்ள தகராறுக்குரிய சக்தி வளங்களை சுரண்டுவதில் காணப்பட்ட முன்னேற்றங்களை உத்தியோகபூர்வமாக கொண்டாடிக்கொணடிருக்கிறது.

   

விஸ்தரிப்புக்கான மூலோபாயம்

   

தென்சீனக் கடலில் உள்ள பராசெல் தீவுகளில் எட்டு வியட்நாமிய மீனவர்களுடன் சென்றுகொண்டருந்த மீன்பிடிப்படகொன்றை சீன கரையோரக்காவல் கப்பலொன்று மோதி மூழ்கடித்ததாக இம்மாத ஆரம்பத்தில் வியட்நாமிய வெளிவிவகார அமைச்சு அறிவித்தது. சீனாவின் இச்செயல் பராசெல் தீவுகளின் மீதான  வியட்நாமின் சுயாதிபத்தியத்தை மீறுவதாக அமைந்ததுடன் சொத்து இழப்பை ஏற்படுத்தி,  வியட்நாமிய மீனவர்களின் உயிர்களுக்கும்  பாதுகாப்பு மற்றும் நியாயபூர்வமான நலன்களையும் ஆபத்துக்குள்ளாக்கியிருக்கிறது என்று வெளியுறவு அமைச்சு குற்றஞ்சாட்டியிருக்கிறது.

 

சீனாவின் செயல் ஹனோயினதும் பெய்ஜிங்கினதும் தலைவர்களுக்கிடையில் எட்டப்பட்டிருந்த உடன்பாடுகளுக்கும் தென்சீனக் கடல் தகராறில் சம்பந்தப்பட்ட சகல தரப்புகளையும் கட்டுப்படுத்தும் உத்தேச ஒழுக்கக்கோவைக்கும் முரணாக இருக்கிறது என்றும் அது கூறியிருக்கிறது.

ஹனோயில் உள்ள சீனத்தூதரகத்தில் இராஜதந்திர ஆட்சேபனையொன்றை பதிவுசெய்த வியட்நாமிய அரசாங்கம் சம்பவம் குறித்து விசாரணை செய்து மேற்கூறப்பட்ட சீனக்கப்பலில் கடமையில் இருந்த அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான  ஒழுங்கு நடவடிக்கையை எடுக்குமாறும் இதே போன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுக்குமாறும் வியட்நாமிய மீனவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்காக போதுமானளவு இழப்பீடுகளை வழங்குமாறும் சீனத்தரப்பிடம் வேண்டுகோள் விடுத்தது.

 

நடுனா கடலைச் சுற்றியுள்ள நீர்ப்பரப்பிலும் சீனாவின் மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் கரையோரக்காவல் கப்பல்கள் இந்தோனேசிய மீன்பிடிப்படகுகளுடன் தகராறில் ஈடுபட்ட பல சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. பெப்ரவரியில் சீனக் கரையோரக காவல் கப்பல்கள் சகிதம் வந்த சீன மீன்பிடிப்படகுகள் அவற்றின் இழுவை வலைகளை மீண்டும்  வீசிவிட்டுச்சென்றன. நடுனா கடலில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் சீனாவின் செயல் உலகளாவிய விளைவுகளைக் கொண்டிருக்கிறது. தென்சீனக் கடலுக்கு  பெய்ஜிங்கின் விஸ்தரிப்புவாத உரிமைக்கோரிக்கைகளை பிராந்திய அரசாங்கங்களுக்கு நினைவுபடுத்துகிறது. உலகின் கடல்சார் வாணிபத்தின் மூன்றில் ஒரு பங்கு இந்த தென்சீனக் கடலின் ஊடாகவே இடம்பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவங்கள் தவிரவும், மார்ச் பிற்பகுதியில் மேற்கு பிலிப்பைன்ஸ் கடலில் காஜிரிங்கான் பாறைகள் மீது சீன இராணுவ விமானமொன்று  தரையிறங்கியதை செய்மதி படங்கள் காட்டின. காஜிரிங்கான் பாறையிலும் மேற்கு பிலிப்பைன்ஸ் கடலில் உள்ள இன்னொரு பாறையான சமோறா பாறையிலும் சீனா அண்மையில் ஆராய்ச்சி நிலையமொன்றை திறந்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஸ்பிறற்லீஸ் தீவுகளில் சூழல்தொகுதி, புவியமைப்பியல் மற்றும் சுற்றாடல் தொடர்பாக தரவுகளைத் திரட்டுவதே இந்த ஆராய்ச்சி நிலையத்தின் நோக்கமாகும்.

 

கொவிட் - 19 தொற்றுநோய் பரவல் சீனாவின் பிராந்திய விரிவாக்க மூலோபாய நோக்கங்களை குறைத்திருந்தது போலத் தோன்றியது. ஆனால், தென்சீனக் கடலில் இடம்பெறுகின்ற வழக்கமான விமானப்போக்குவரத்து நடவடிக்கைகள் நாட்டின் சுகாதார நெருக்கடியினால் சீன இராணுவம்  பாதிப்பு ஏற்படவில்லை என்பதையே உணர்த்துகிறது.

சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு சீனாவுடன் போட்டியாக உரிமைகோருகின்ற பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் வியட்நாமிய மீன்பிடிப்படகு மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டனம் செய்திருக்கின்றன. பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டது." அத்தகைய சம்பவங்கள் பெய்ஜிங்கிற்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பாதிக்கும் " என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேவேளை,அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்த அறிக்கையில், " உலகளாவிய தொற்றுநோயை தோற்கடிப்பதற்கான சர்வதேச முயற்சிகளை ஆதரிப்பதில் கவனத்தைக் குவிக்குமாறும் தென்சீனக்கடலில் சட்டவிரோதமான உரிமைக்கோரிக்கையை விஸ்தரிப்பதற்கு  ஏனைய அரசுகளின் எதிர்ப்பாற்றல் குன்றிய தன்மையை அல்லது தொற்றுநோயின் மீது நாடுகள் முழுமையாக கவனத்தை திருப்பியிருக்கும் சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்வதை நிறுத்திக்கொள்ளுமாறும் மக்கள் சீனக் குடியரசை நாம் கேட்டுக்கொள்கிறோம் " என்று கூறப்பட்டிருந்தது.

தென்சீனக்கடலில் சீனாவின் இந்த அத்துமீறல்களும் முன்னகர்வுகளும் சீனாவின் உலகளாவிய பிரதிமையை குன்றச்செய்வதுடன் தென்கிழக்காசிய அயல்நாடுகளுடனான அதன் உறவுகளைப் பாதிப்பது மாத்திரமல்ல,கொவிட் --19 தோற்றுவித்திருக்கும் சவால்களுடன் மற்றைய நாடுகளில் பல  மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும்போது சர்ச்சைக்குரிய கடல்பரப்பில் தன்முனைப்பான நடவடிக்கைகளில்  சீனா ஏன் தொடர்ந்து ஈடுபடுகின்றது என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

   

அயலகத்தில் விஸ்தரிப்புவாதத்தை முன்னெடுக்கும் ஒரு  இராணுவக்கொள்கை ( கொவிட் --19 பரவலைக் கையாண்டமுறையினால் காயப்பட்டுப்போயிருக்கும் ) சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நம்பகத்தன்மையை தூக்கிநிமிர்த்துவதற்கான  ஒரு வழி என்கிற அதேவேளை, தொற்றுநோயினால் அமெரிக்கா தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில் கிடைத்திருக்கக்கூடிய அரிய வாய்ப்பாக தற்போதைய தருணத்தை கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள பலரும் நோக்குகிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

   

வியட்நாமுடனான அமெரிக்க உறவுகள் அண்மைய காலத்தில் மேல்நோக்கிய திசையிலேயே நகர்ந்திருக்கின்றன.தென்சீனக்கடலில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் சுதந்திரமான  கடற்போக்குவரத்து நடவடிக்கையை (  US's Freedom of Navigation Operations -- FONOPS  ) வியட்நாம் தீவிரமாக ஆதரித்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உறுதியான நிலைப்பாடொன்றையே சீனா எப்போதும் எடுத்திருக்கிறது. அமெரிக்க நடவடிக்கைக்கு சமதையான முறையில் சீனாவும் தனது வல்லமையை வெளிக்காட்டும் நகர்வுகளைச் செய்தது. அமெரிக்கப் பெருநிலப்பரப்பை தொற்றுநோய் முழுப்பலத்துடன் தாக்குவதற்கு முன்னதாக தென்சீனக்கடலில் '  ஃபொனொப் ' நடவடிக்கைக்கையொன்றில்  ' யூ.எஸ்.எஸ்.மக்காம்பெல் ' என்ற பெயருடைய ஏவுகணை வழிகாட்டல் நாசகாரிக்கப்பலை பென்ரகன் ஈடுபடுத்திய உடனடியாக சர்ச்சைக்குரிய கடற்பரப்பில் நீர்மூழ்கி எதிர்ப்பு  ஒத்திகைகளை சீனா செய்தது குறிப்பிடத்தக்கது.

   

தற்போது தென்கிழக்காசிய நாடுகள் சங்கத்தின் ( ஏசியான் ) தலைமையை வியட்நாம் வகிக்கிறது. நீண்டநாட்களாக தயாரிக்கப்பட்டுவரும் ஒழுக்கக்கோவை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு வியட்நாமே தலைமை தாங்கவிருக்கிறது. சர்ச்சைக்குரிய கடல்பரப்புக்கும் தீவுகளுக்கும் உரிமைகோராமல் இருக்கும் நாடுகளுக்கு அல்லது அந்த கடல்பரப்பில் சீனாவின் தன்முனைப்பான நடவடிக்கைகள் அதிகரிப்பதை ஆட்சேபித்து தீவிரமாக குரலெழுப்புகின்ற வெளிப்பிராந்திய நாடுகளுக்கு  சார்பானதாகவே வியட்நாம் எப்போதும் இருந்துவருகிறது. உரிமைகோருகின்ற சகல நாடுகள் மத்தியில் வியட்நாம் எப்போதுமே தென்சீனக்கடலில் சீனாடின் நடவடிக்கைகளுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டையே எடுத்துவந்திருக்கிறது.

     

தென்சீனக்கடலில் சீனாவின் நடவடிக்கைகள் தொடர்பில் நிலைப்பாட்டை மாற்றிவந்திருக்கும் பிலிப்பைன்ஸையும் நடுனா  கடலில் சீனாவின் அச்சுறுத்தலை மிகவும் காலந்தாழ்த்தி அடையாளம்கண்டுகொண்ட  இந்தோனேசியாவையும்  போலன்றி, வியட்நாம் சீனாவுக்கு எதிராக மிகவும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. கொவிட் -- 19 க்கு எதிரான தனது நடவடிக்கைகளைப் பொறுத்தவரையிலும் கூட, பெப்ரவரி தொடக்கத்திலேயே  சீனாவில் இருந்தும் சீனாவுக்குமான சகல விமானசேவைகளையும் முதலில் இடைநிறுத்திய ' ஏசியான் ' நாடு வியட்நாமேயாகும். அதனால், தென்சீனக்கடல் தகராறில் வியட்நாமின் வியூகங்கள் மீது சீனா எப்போதுமே ஒரு எச்சரிக்கையுணர்வுடனான பார்வையை வைத்திருக்கிறது.

   

உலகளாவிய நம்பகத்தன்மையை சீனா மீட்டெடுப்பதிஞ் நாட்டம்கொண்டு செய்படுகின்ற வேளையில், தென்சீனக்கடலில் பதற்றத்தை தோற்றுவிக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு சீனா முன்னுரிமை கொடுப்பது உகந்ததல்ல. உலகில் தனது உயர்த்தியை உறுதிசெய்வதற்கு உலகளாவிய தொற்றுநோயின்போது சீனா அதன் பெருந்தன்மையை கூடுதலாக வெளிக்காட்டி பல நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும். ஆனால், கடந்த காலத்தில் பல தடவைகள் பொய்யாக்கப்பட்ட எதிர்பார்ப்பாக அது அமைந்துவிட்டதையே கண்டோம். விஸ்தரிப்புவாத பிராந்திய பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கைவிடுவது சாத்தியமேயில்லை.

( புதுடில்லி ஒப்சேர்வர் றிசேர்ச் பவுண்டேசனைச் சேர்ந்த சர்வதேச உறவுகள் பேராசிரியர் ஹர்ஷ் வி. பந்த்,  இணை ஆய்வாளர் பிரேம்ஷா சஹா ஆகியோர் கூட்டாக எழுதியது)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48