(நா.தனுஜா)

நாட்டில்  ஊரடங்குச்சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், சாதாரண வறிய மக்களுக்கு அவசியமான பாதுகாப்பு உதவிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியிருக்கிறார்.இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்  செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

நாட்டில் ஊரடங்கு நிலைமை மேலும் நீடிக்கப்பட்டிருக்கிறது. இதனூடாக கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை  அதிகரித்துவரும்  நிலைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றமை தெளிவாகின்றது.

எனினும் சாதாரண வறிய மக்களின் அன்றாட வாழ்க்கையும் இயல்பாக நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டியுள்ளது. தொடர்ச்சியாக ஏழாவது வாரமாகவும் நாம் ஊரடங்கு உத்தரவிற்கு  உட்பட்டுள்ளோம். இக்காலப்பகுதியில் அதிக தேவையுடைய, வறிய மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்பு,  உதவிகள் தேவைப்படுகின்றது. அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.